திறன் தமிழ்நாடு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.24.50 லட்சம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

திறன் தமிழ்நாடு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.24.50 லட்சம்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்



சென்னை, ஜன.


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திறன் தமிழ்நாடு 2025 போட்டியில் மாநில அளவில் முதலிடம் வென்ற 70 மாணவர்களுக்கு தலா 25,000 ரூபாய் மற்றும் 2 ஆம் இடம் பெற்ற 69 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் என மொத்தம் 24.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் போட்டி நடந்தது.


தொடர்ந்து 2025 – 26 ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் 2026 டிசம்பர் மாதம் முதல் நடைபெற்ற வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 1,194 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவின் வாயிலாக உறைவிடப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வில் 25 நபர்களும், வங்கித்தேர்வில் 44 நபர்களும், இரயில்வே தேர்வில் 11 நபர்களும் என 80 மணவ, மாணவிகள் வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்களில் 16 வெற்றியாளர்களுக்கு துணை முதலமைச்சர் இன்றைய நிகழ்ச்சியில் பதக்கம் வழங்கி சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:–


தமிழ்நாட்டில் பல திறமை யாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். நான் முதல்வன் திட்டம் மூலமாக வரும் ஜூன் வரை தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதன் மூலமாக பல ஆயிரம் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்று கூறினார்.


பணி நியமன ஆணை


இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், இந்தியா திறன் 2026 போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்க முன்வந்துள்ள எல் அண்ட் டி, சோகோ, நிப்பான் பெயிண்ட்ஸ், பெஸ்டோ, நேச்சுரல்ஸ், ஸ்ரீராமகிருஷ்ணா அட்வான்ஸ்டு டிரையினிங் இன்ஸ்டிடியூட், உம்முடி பங்காரு, ஷோபா பில்டர்ஸ், மதர்சன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, அஸ்பயர் ஃபுட்வியர், கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.


தமிழ்நாட்டின் மாணவர்கள் சர்வதேச கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை சூழலில் சிறந்து விளங்க தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பிரிவான SCOUT (Scholarships for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) திட்டத்தின் கீழ் தற்போது தென் கொரியா நாட்டில் பயிற்சியை நிறைவு செய்த 10 மாணவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் பட்டப்படிப்பு முடிந்த பின்னர் மேற்படிப்பினை தென் கொரியாவில் தொடர சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் வழிகாட்ட முன்வந்துள்ளனர். இந்த மாணவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் கல்தேர் முன்பாக துணை முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கலந்துரையாடல்


முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு திறன் போட்டி காண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்ப படைப்புகளை துணை முதலமைச்சர் பார்வையிட்டு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, சிறப்பான படைப்பு உருவாக்கிய மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, திட்ட இயக்குநர் செ.சாந்தி, தைபே 2025 உலக திறன்போட்டியில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முகம்மது மபாஸ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர் சுரேந்திரன், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவன அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%