புகழின் சிகரத்தை தொட்ட முதல் எழுத்தாளர்...
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடிசூடா மன்னராய் விளங்கியவர்...
தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி...
சிறுகதை, நாவல், கட்டுரைகள், இதழாளர், சுதந்திர போராட்ட வீரர், அரசியல் செயற்பாட்டாளர், சினிமா எழுத்தாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர்...
தமிழ் இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப் பெற்றவர்...
சொந்தமாக பத்திரிக்கை நடத்தியவர்...
தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கு பங்களித்தவர்...
கையில் எடுத்தால், கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் இவரது எழுத்துக்கள்...
இவரது எழுத்து நடை ஒரே சீரில் கொண்டிருக்கும் நதியை போன்றது...
கல்கி என்கிற ரா.கிருஷ்ணமூர்த்தி...!!
ஆரம்ப வாழ்க்கை :
கல்கியின் இயற்பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. மயிலாடுதுறையை அடுத்துள்ள புத்தமங்கலத்தில் 1899ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி பிறந்தார்.
பெற்றோர்கள் இராமசாமி ஐயர், தையல் நாயகி ஆவர். ஆரம்ப பள்ளிப்படிப்பை தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.
திருமண வாழ்க்கை :
கல்கியின் மனைவியின் பெயர் ருக்மணி. அவர்களுக்கு ராஜேந்திரன், ஆனந்தி என்று இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
இலக்கிய வாழ்க்கை :
1923ஆம் ஆண்டு நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். கல்கி என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் நகைச்சுவை கட்டுரை ஏட்டிக்குப்போட்டி 1927ஆம் ஆண்டு வெளியானது.
1930ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் பொறுப்பாசிரியர் ஆனார். விகடனில் கல்கி எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி, தமிழ்நாடெங்கும் கல்கியின் புகழை பரப்பியது.
1940ஆம் ஆண்டின் இறுதியில் ஆனந்த விகடனில் இருந்து விலகினார் கல்கி. இதற்கு பிறகு சதாசிவத்துடன் இணைந்து புதிய கல்கி என்ற பத்திரிக்கையை துவங்கினார்.
தமிழின் முதல் சரித்திர நாவலான பார்த்திபன் கனவு கல்கியில் தொடராக வெளியாயிற்று. அதனை அடுத்து வெளிவந்த சிவகாமியின் சபதம் கல்கிக்கு இணையற்ற புகழை தேடித்தந்தது.
சுதந்திரப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு கல்கி தீட்டிய அலை ஓசை, அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.
1952-53ல் கல்கி எழுதத்தொடங்கிய பொன்னியின் செல்வன் மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கல்கி என்றாலே பொன்னியின் செல்வன்தான் ஞாபகத்துக்கு வரும். அதை படிக்கிற போது கதாபாத்திரங்களோடு நாமும் கதை நடக்கிற இடத்துக்கு சென்றுவிடுவோம். வாசகர்களை அப்படி இழுத்துக் கொண்டு விடுகிற வசீகரம் அவருடைய எழுத்துக்கு இருந்தது.
இறப்பு :
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி, தமது 55வது வயதில் காலமானார்.
கல்கியின் நூற்றாண்டு விழா, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் ஓராண்டு காலம் கொண்டாடப்பட்டு, 9.9.1999ல் நிறைவடைந்தது. அப்போது கல்கி உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.
விருதுகள் :
சாகித்ய அகாடமி விருது - 1956
சங்கீத கலாசிகாமணி விருது - 1953
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024