கோவை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 34 பேருக்கு ரூ.3.21 லட்சத்தில் நலத்திட்ட உதவி
Oct 04 2025
10

கோவை, அக். 1–
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவரிடம் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 44 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வேண்டி 151 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 4 மனுக்களும், 177 இதர மனுக்கள் என மொத்தம் 376 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, சமூக நலத்துறை சார்பில் அரசிதழில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 24 திருநங்கைகளுக்கு ஆணைகளையும், தனியார் தொண்டு நிறுவன நிதியுடன் 5 திருநங்கைகளுக்கு தலா ரூ.5600 மதிப்புள்ள தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளி கள் நலத்துறை சார்பில் ரூ.2.93 லட்சம் மதிப்பீட்டில் 5 பேருக்கு செயற்கை கால்களையும் என மொத்தம் 34 பேருக்கு ரூ.3.21 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) வாணிலெட்சுமி ஜெகதம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, உதவிஇயக்குநர் (நிலஅளவை) சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, தாட்கோ பொது மேலாளர் மகேஸ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?