சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் வந்தது

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் வந்தது



கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை பதிவு செய்தது.

சபரிமலை,


மண்டல சீசனின் தொடக்கத்திலேயே சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரலாறு காணாத கூட்டம் இருந்தது. இதனால் பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் பெரும் இன்னல்களை சந்தித்தனர். கடந்த 18-ந் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி கேரள மாநிலம் கோழிக்கோடு எடக்குளம் பகுதியை சேர்ந்த சதி (வயது59) என்ற பெண் பலியானார்.


கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய முடியாமல் பாதியில் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு திரும்பி சென்ற பக்தர்கள் திருவாபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு சென்றார்கள். அங்கு இரு முடி கட்டுகளை அவிழ்த்து தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்த பிறகு மாலையை கழற்றி வைத்து விட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் 100-க்கு மேற்பட்டவர்கள் மாலைகளை கழற்றி வைத்து விட்டு சென்றதாக வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் நிர்வாகம் அறிவித்தது.


இதற்கிடையே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறிய திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கலாமே எனவும் தெரிவித்திருந்தது.


ஆன் லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், உடனடி தரிசன பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் என தீர்மானித்து பக்தர்கள் அனுப்பப்பட்டனர். ஆனால் உடனடி தரிசன பதிவு மூலம் 30 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் சென்றனர். இதனால் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.


இதைத்தொடர்ந்து உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அதன்படி நேற்று ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேர் என மொத்தம் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கையால் சபரிமலையில் கூட்டம் கட்டுக்குள் வந்துள்ளது.


உடனடி தரிசன முன்பதிவு தினசரி 5 ஆயிரமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து எருமேலி, செங்கன்னூர் மற்றும் பம்பை முன்பதிவு மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது வண்டிப்பெரியார் மற்றும் நிலக்கல் ஆகிய 2 இடங்களில் மட்டும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உடனடி முன்பதிவை நம்பி இருக்காமல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்தை உறுதி செய்து வருமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%