சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் டாக்டர் தவறவிட்ட கைக்கடிகாரம்: 44 நிமிடங்களில் மீட்பு
Oct 20 2025
11

சென்னை: நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு வந்தடைந்த வந்தே பாரத் விரைவு ரயிலில் டாக்டர் ஒருவர் தவறவிட்ட கைக்கடிகாரம் 44 நிமிடங்களில் மீட்கப்பட்டது. தொடர்ந்து, உரியவரிடம் ஒப்படைத்த ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரியை ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டினர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்தே பாரத் ரயில் கடந்த 17-ம் தேதி புறப்பட்டது. இந்த ரயிலில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை எழும்பூருக்கு டாக்டர் ஜெ.மரியானோ ஆண்டோ ப்ருனோ என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடைந்தது.
இதன்பிறகு, மரியானோ ஆண்டோ ப்ருனா வீட்டுக்கு சென்றார். வீட்டில் தனது கைக்கடிகாரத்தை பார்த்தபோது, அது தவறி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதாவது, அவர் பயணம் செய்த பெட்டியில் கழிவறையில் கைக்கடிகாரத்தை தவறவிட்டது தெரியவந்தது,
இதையடுத்து, அவர் தனது கைக்கடிகாரம் காணாமல் போனது குறித்து நள்ளிரவு 12.28 மணிக்கு ரயில் செயலியில் புகார் அளித்தார். இதையடுத்து, ரயில்வே உதவி மையத்தில் இருந்து, எழும்பூர் ரயில்வே அதிகாரி மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த ரயிலில் சோதிக்க முயன்றபோது, அந்த ரயில் யார்டுக்கு சென்றுவிட்டது. அங்கு சென்ற ஆர்பிஎஃப் போலீஸார் 44 நிமிடங்களில் அந்த கைக்கடிகாரத்தை மீட்டனர். அவர்கள் ரயில்வே அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, ப்ருனோவுக்கு அதிகாலை 1.12 மணிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அவர் சென்னை எழும்பூர் வணிக துணை நிலைய மேலாளரிடமிருந்து தனது கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த உடனடி நடவடிக்கையைப் பாராட்டிய ப்ருனோ, சென்னை கோட்டத்தின் செயல்திறனைப் புகழ்ந்து தனது நன்றியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
கைக்கடிகாரத்தை மீட்டு ஒப்படைக்க உதவிய ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரியை ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டினர். இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், “நள்ளிரவு நேரத்திலும் கூட, பயணிகள் விரைவான மற்றும் பயனுள்ள உதவியைப் பெறுவதற்கு ரயில்மதத் செயலி எவ்வாறு உதவுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாகும். பயணிகள் அவர்களின் பயணத்தின்போது உடனடியாக உதவிக்கும் ரயில்மதத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.” என்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?