சென்னை வந்த விரைவு ரயிலில் தனியாக இருந்த பெண் குழந்தை: பாதுகாப்பாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸார்

சென்னை வந்த விரைவு ரயிலில் தனியாக இருந்த பெண் குழந்தை: பாதுகாப்பாக மீட்ட ஆர்பிஎஃப் போலீஸார்


 

சென்னை: ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் கைவிடப்பட்ட 9 மாத பெண் குழந்தையை ஆர்பிஎஃப் போலீஸார் மீட்டனர்.


சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை ஒரு தகவல் வந்தது. அதில், ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துகொண்டிருக்கும் விரைவு ரயிலின் எஸ்-7 பெட்டியில் 9 மாத பெண் குழந்தை பெற்றோர் இல்லாமல் தனியாக இருப்பதாக ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மதுசூதன ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இத்தகவலின் பேரில், மதுசூதன ரெட்டி தலைமையில் மகளிர் துணை உதவி ஆய்வாளர் மற்றும் ஆர்பிஎஃப் போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அந்த ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு அதிகாலை 5:30 மணிக்கு வந்தவுடன், எஸ்-7 பெட்டியில் இருந்த குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர். உடனடியாக, குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன்பிறகு, குழந்தையை சென்னை சென்ட்ரல் குழந்தை பாதுகாப்பு உதவி மையத்தில் ஒப்படைத்தனர்.


இதற்கிடையில், ரயிலின் அனைத்து பெட்டிகளையும் ஆர்பிஎஃப் போலீஸார் முழுமையாக சோதனை செய்தனர், இருப்பினும், அக்குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த ரயில் கோயம்புத்தூரை கடந்தபின் எஸ் 7 பெட்டியின் 37-வது பெர்த்தில் குழந்தை காணப்பட்டதாக பயணிகள் சிலர் கூறினர். பயணிகள் கொடுத்த தகவல், ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆர்பிஎஃப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%