டெல்லி கார் வெடிப்பு: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை நிறைவேற்றப்படும் - அமித்ஷா

டெல்லி கார் வெடிப்பு: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை நிறைவேற்றப்படும் - அமித்ஷா



சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,


டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது.


சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன. கார் வெடித்ததும், அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து தப்பியோடினர். 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும், வேன், ஆட்டோ மற்றும் கார் என 8-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன. கார் பாகங்களும், மனித உடல்களும் பரவி கிடந்தன.


இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் டெல்லி காவல் துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டெல்லி விமான நிலையம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவின்பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது அவர் கூறியதாவது;-


“டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார். அது நிச்சயமாக நிறைவேற்றப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் மூலம், இந்தியாவில் இனி இதுபோன்ற செயல்களை செய்வதற்கு யாரும் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். இதனை நிறைவேற்றுவதில் மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் உறுதியாக உள்ளது.”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%