தங்க நகை சேமிப்பு திட்டம்.. 10 வருடங்களில் முதல் முறையாக பெரிய சரிவு.. தங்க பத்திரத்திற்கு கிராக்கி

தங்க நகை சேமிப்பு திட்டம்.. 10 வருடங்களில் முதல் முறையாக பெரிய சரிவு.. தங்க பத்திரத்திற்கு கிராக்கி


 

சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த காரணத்தால், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் தவணைகள் செலுத்தி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நகைகளாகப் பெற்றுக்கொள்ளும் தங்க நகை சேமிப்பு திட்டடங்களில் பணம் செலுத்துவது 10 ஆண்டுகளில் முதல் முறையாக பெருமளவு குறைந்துள்ளது. அதேபோல் தங்க நகைக்கடைகள், தங்கத்தை இறக்குமதி செய்வதும் சரிந்து வருகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் தேவை இந்தியாவில் கணிசமாக சரிவை சந்தித்துள்ளது.


தங்கம் விலை ஒரு சவரன் வெறும் இரண்டு மாதத்தில் அப்படியே 20000 வரை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் 73 ஆயிரம் ஆக இருந்த தங்கம் விலை, இன்று 92 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தங்கம் விலை கடந்த ஓராண்டில் 56 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 23 சதவீதம் உயர்ந்திருந்தது. ஆனால் உச்சகட்டமாக தங்கம் விலை வரலாறு காணாத வேகத்தில் உயர்ந்து வருகிறது. விரைவில் ஒரு லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தங்கம் விலை இந்த வேகத்தில் உயர காரணம், பொருளாதார மந்த நிலை என்று சொல்வதைவிட பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை பல நாடுகளில் உள்ளது தான் காரணம் ஆகும். அமெரிக்காவின் மத்திய வட்டி விகிதம் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முக்கியமான காரணமாக உள்ளது. ஏனெனில் டாலரில் தான் உலக நாடுகளில் வணிகம் நடக்கிறது. அது மற்ற நாடுகளுக்கு எதிராக தற்போது பலவீனமாகி வருகிறது. இந்த சூழலில் வட்டி விகிதம் குறைத்தால், பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இது இயல்பாகவே நடக்கும். அதுதான் தங்கம் விலை உயர முதன்மையான காரணமாக உள்ளது.


அடுத்ததாக இந்தியாவில் தங்கம் விலை உயர்வதற்கு காரணம், அமெரிக்கா நடத்தி வரும் வர்த்தக போர் தான். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 50 சதவீதம் வரி விதித்து இருப்பதும் தங்கம் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதும் தங்கம் விலை உயர காரணமாக உள்ளது.


தங்கம் 600 டன் ஆக சரிவு

அதேபோல் உலக நாடுகளை பொறுத்தவரை அந்நாட்டின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதும் தங்கம் விலை உயர காரணமாக உள்ளது. அதேபோல் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள அரசியல் குழப்பங்கள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கித் தள்ளி இருக்கிறது. தங்கம் விலை அதிகரித்தபடியே உள்ளதால், தங்கத்திற்கான தேவை குறைந்துள்ளது. உலகதங்க கவுன்சில் வெளியிட்ட ஆய்வின் படி, இந்தியாவின் தங்க இறக்குமதி 802 டன்னில் இருந்து 600 முதல் 700 டன்னாக சரிந்துள்ளது. தங்கத்தை வாங்குவதற்கு பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற நிலையில், தங்க நகைக்கடைகள் வாங்க போதிய ஆர்வம் காட்டவில்லை. அதேபோல் இருக்கும் தங்க நகைகளும் பெரிய அளவில் நகைக்கடைகளுக்கு விற்பனையாகாமல் உள்ளது.


தங்க நகை சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி

இதனை எதிரொலிக்கும் வண்ணம், பிரபல நகைக்கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டங்களில் மிகப்பெரிய வீழ்ச்சி நடந்துள்ளது. 10 ஆண்டுகளில் முதல் முறை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், கோவிட் காலத்தைத் தவிர்த்து, முக்கிய நகைக்கடைகள் செயல்படுத்தும் தங்கத் தவணைத் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் 2024-2025 நிதியாண்டில் முதல் முறையாகச் சரிந்துள்ளது. தங்கத்தின் விலை சமீபத்தில் 10 கிராமுக்கு ₹1.22 லட்சம் என்ற அளவில் இருந்ததால், தவணைத் திட்டங்களில் டெபாசிட்கள் கடுமையாகக் குறைந்து வருகிறது.


தங்கப் பத்திரங்களில் ஆர்வம்

அதேநேரம் முதலீட்டாளர்கள் தங்கப் பத்திரங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் விலை ஒரு வருடமாகக் 56% உயர்ந்த போதிலும், பல முதலீட்டாளர்கள் தங்கப் பத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள். இதனால் இந்தப் பத்திரங்களின் விலை தற்போதைய சந்தை விலையைவிட 20-30% அதிகமாக உள்ளது. தங்க முதலீட்டு பத்திரங்களை இப்போது முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் ஆண்டுதோறும் 2.5%}$ வட்டி ஈட்டலாம். மேலும், முதிர்ச்சியின் போது கிடைக்கும் வருமானம் வரி விலக்கு கிடைக்கும். எனினும், இந்தப் பத்திரங்களை முதிர்ச்சிக்கு முன்னால் விற்பது (Tricky) சிக்கலானது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால் எச்சரிக்கையை மீறி சிலர் விற்பதும் நடக்கிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் டாலர், ரூபாய் உள்பட பல்வேறு நாட்டு நாணயங்களின் மதிப்பின் ஏற்ற இறக்கங்களிலிருந்து தங்கள் சேமிப்பைப் பாதுகாக்க மக்கள் தங்கப் பத்திரங்களை வாங்குவது அதிகரித்துள்ளது.


டிஜிட்டல் தங்கம்

அதேபோல் தங்க நகை சேமிப்பு ஆர்வம் குறைந்த பல வாடிக்கையாளர்கள் இப்போது டிஜிட்டல் தங்கத்தை (Digital Gold) தேர்வு செய்கிறார்கள். இதை எந்த நேரத்திலும், எந்த அளவிலும் வாங்கலாம் மற்றும் நகையாக மாற்றாமல் ஆன்லைனில் விற்கவும் முடியும் என்பதால் விரும்புகிறார்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%