தனியார் காப்பகத்தில் ‘பெல்ட்டால்’ அடித்து சிறுவன் சித்ரவதை

தனியார் காப்பகத்தில் ‘பெல்ட்டால்’ அடித்து சிறுவன் சித்ரவதை

கோவை, செப். 25–


கோவை அருகே தனியார் காப்பகத்தில் சிறுவனை, அதன் காப்பாளர் ‘பெல்ட்’டால் அடித்த சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


சம்பவத்தன்று இந்தக் காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த காப்பாளர், ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது ‘பெல்ட்’டை எடுத்து அடிக்கிறார். வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ‘‘ஐயோ.. அம்மா’’ என வலியால் கத்துகிறான். சிறுவனின் அலறல் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.


வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே உட்கார்ந்துள்ளான். அப்போதும் அந்த காப்பாளர், சிறுவனை ‘பெல்ட்’டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய்உள்ளனர்.


இப்படி சிறுவனை அவர் தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறிக் கொண்டு இருப்பதையும் அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.


இந்தச் சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படமெடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.


இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அந்தத் தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%