தமிழகத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
கோவையில் ஒரு காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழகத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் வாழ்வில் படித்து வளம்பெற வேண்டும் என்பதற்காக, அரசு அவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுத்து உயர்கல்வி பயின்று சிறந்த கல்வியாளராக வரவேண்டும் என்ற நோக்கத்தில் அன்பு கரங்கள் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட அன்றைய தினம் 6,082 பேருக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதுநாள் வரை இந்த திட்டத்தில் 6,455 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆதரவற்ற மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகளும், தாய் அல்லது தந்தை இல்லாத குழந்தைகள் பதிவு செய்யலாம். இந்த திட்டத்தின் கீழ் விடுபட்ட குழந்தைகள் யாராக இருந்தாலும் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி கல்லூரி உட்பட எங்கு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் நடந்தாலும் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் 1098, 181 என்ற எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. பாட புத்தகங்கள் மூலமாக விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து பரந்த அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தற்போது பெண்கள் தாங்களாக முன் வந்து புகார்களை கொடுத்து வருகிறார்கள். புகார் அளிக்க கூடியவர்களின் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சட்டத்துறை மூலம் உதவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தங்குவதற்கு காப்பகத்தில் வசதி உள்ளிட்ட அனைத்தையும் சமூக நலத்துறை சார்பில் செய்து வருகிறது. மேலும் வழக்குகளின் நிலை குறித்தும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. குறிப்பாக பத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் குற்ற செயல்கள் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சமூக நலத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்காக, பெண்களின் நலனுக்காக குற்றசெயல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் என்பதில் நமது துறையும், தமிழ்நாடு அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்தினார்கள். கடுமையான தண்டனையாக அறிவித்து, தண்டனை காலத்தை அதிகப்படுத்தி சட்டத்திருத்தம் செய்தார்கள். மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசின் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு அந்தச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அப்படியொரு எண்ணமே சமுதாயத்தில் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள காப்பகங்கள் அனைத்தும் பதிவு பெற்று, சமூக நலத்துறையில் அங்கீகாரம் வாங்கி உரிய அனுமதி பெற்று நடத்த வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட காப்பங்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனுமதி இல்லாமல் எந்த காப்பகங்களும் நடத்தப்படவில்லை. காப்பகங்களுக்கு சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இணையதளத்தில் பதிவு செய்து இயக்குநரகத்திற்கு அனுப்புவதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் ஒரு காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த இல்லம் மூடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.