திமுக பணத்தில் சிங்கிள் டீ கூட குடிக்கவில்லை • மா.கம்யூ.செயலாளர் சொல்கிறார்
திருவாரூர், ஜூலை 20-
தேர்தல் செலவுக்காக திமுக தந்த பணத்தில் ஒரு சிங்கிள் டீ கூட மா. கம்யூ., தொண்டன் குடிக்கவில்லை,” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறினார்.
இதுகுறித்து திருவாரூரில் அவர் அளித்த பேட்டி-
கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக மாநில பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கம்யூனிஸ்ட்களை மிகக் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அவர் முதல்வராக இருந்த காலத்திலும் சரி, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற காலத்திலும் மத்திய பாஜக அரசு எதைச் செய்தாலும், அது மாநில உரிமையை பாதிக்கின்ற விஷயமாக இருந்தாலும், மக்கள் விரோத, விவசாயிகள் நடவடிக்கையானாலும், அதனை ஆதரிக்க கூடிய நபராக கடந்த 8 ஆண்டுகளாக பழனிசாமி செயல்பட்டு வந்துள்ளார்.
தலையாட்டி பொம்மை
மோடியும், அமித்ஷாவும் ஆட்டுவித்தால் ஆடக்கூடிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு வருபவர் பழனிசாமி. அப்படிபட்டவர், கம்யூனிஸ்டுகள் போராடவில்லை என குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. மக்களை பாதிக்கும் விஷயத்தை மத்திய, மாநில அரசுகள் செய்தால் அதனை உடனடியாக எதிர்த்து வலிமை மிக்க போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வருகின்றது. எனவே போராடுவதற்கு கம்யூனிஸ்ட்களுக்கு சொல்லித் தரக்கூடிய இடத்தில் அவர் இல்லை.
அவர் சொல்லி, கேட்கக்கூடிய இடத்திலும் நாங்கள் இல்லை. வேளாண் விரோத சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தபோது மக்களவையில் அதிமுக ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தத் திட்டம் வருவதற்கு அவசியமே இருந்திருக்காது. லட்சக்கணக்கான விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் போராட வேண்டிய அவசியமோ, 800 விவசாயிகள் உயிரை பறிகொடுக்க வேண்டிய அவசியமோ இருந்திருக்காது. தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தினால் இந்த பிரச்சார இயக்கத்தையும், ஆங்காங்கே ஒருசில ஆர்ப்பாட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
வரவு செலவு கணக்கு
பணம் வாங்கிய பிரச்சினையை 2019 லிருந்து சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவோடு 2019 - ல் நாங்கள் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு போட்டியிட்டபோது, தேர்தல் செலவுக்காக நாங்கள் போட்டியிட்ட 2 தொகுதிக்காக அவர்கள் (திமுக) கொடுத்த பணம் அது.
அதை வாங்கி தேர்தல் செலவுக்கு கொடுத்து விட்டோம். மறைமுகமாகவோ, ஏமாற்றும் விதத்திலோ அதை வாங்கவில்லை. அந்த செலவுகள் அனைத்தும்,நேரடியாக தேர்தல் ஆணையத்தின் வரவு செலவில் காட்டபட்டு, வருமானவரித்துறையின் வரவு செலவில் சேர்க்கப்பட்டுள்ளது.
மறைமுகமாக ஒன்றும் அந்த பணத்தை வாங்கவில்லை. அதிலிருந்து ஒரு சிங்கிள் டீ கூட மா. கம்யூ.,ஒரு தொண்டன் கூட சாப்பிடவில்லை.ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை சொல்ல வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் இதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல், மக்களை தேடிச்சென்று உங்களுக்கு என்ன குறை இருக்கிறது என்று கேட்பது அவ்வளவு பெரிய குற்றமா. இதை ஏன் குற்றமாக பழனிசாமி பார்க்கிறார். மக்களை தேடிச்சென்று குறைகளை கேட்பதும், அதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதும் வரவேற்க வேண்டிய நல்ல விஷயம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
==