திருவண்ணாமலை கோவிலில் கட்டுமான இடங்கள்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அக்.6-–
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கட்டுமான இடங்களை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே கடைகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதே போல் அண்ணாமலையார் கோவிலுக்கு உள்ளே புதியதாக அன்னதான கூடம் மற்றும் கழிவறை ஆகியவற்றை கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கான சிற்ப கலைகளுடன் ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரம் என ஒன்பது கோபுரங்கள் உள்ளது. குறிப்பாக கோவில் வளாகம் மற்றும் கோவிலுக்குள் கட்டுமானங்கள் நடக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுரேஷ், சௌந்தர் ஆகியோர் நேற்று தொடர்ந்து 4 மணிநேரம் ஆய்வு மேற்கொண்டனர். கோவில் ராஜ கோபுரம் எதிரே, அண்ணாமலையார் கோவில் வளாகம், யானை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதிகள் கோவில் வளாகத்திற்குள் நிரந்தரமான எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக்கூடாது கோவிலுக்குள் கழிவறை கட்டிடங்கள் கட்டக்கூடாது கோவில் வெளிப்புறத்தில் கோவிலின் சுற்றுச்சுவரை பாதிக்காத வகையில் காத்திருப்பு அறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராமபிரதீபன் கோட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார் கோவில் இணை ஆணையர் பரணிதரன் தாசில்தார் சு.மோகனராமன் மற்றும் நெடுஞ்சாலை பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?