மெரினா கடற்கரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சி: பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
சென்னை, அக். 6–
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மெரீனா நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைப் பகுதிகளில் மக்களின் வசதிக்காகவும், சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்திடும் வகையிலும், பல்வேறு கட்டமைப்பு வசதிகளும், மேற்கொள்ளப்பட்டு தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையில், மொரினா நீச்சல் குளம் அமைந்துள்ள பகுதியில் உலகத்தரம் வாய்ந்த நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த நீலக்கொடி கடற்கரைப் பகுதிக்கு, மக்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். இங்கு வரும் மக்களின் மகிழ்விற்காகவும், தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடச்சியாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில், விருதாச்சலம் பத்மநாதன் கலைக்குழுவினரின் கரகம், காவடி ஆட்டங்களும், பொள்ளாச்சி விஜயகுமார் கலைக்குழுவினரின் இசையின் ஒலிநயத்தை கொண்டு ஆடப்படும் ஜிக்காட்டம் கலை நிகழ்ச்சியும், திருவண்ணாமலை பாலமுருகன் கலைக்குழுவினரின் பெரிய மேளம் கலை நிகழ்ச்சியும், மதுரை சோழவந்தான் வரதராஜன் கலைக்குழுவினரின் மரக்கால் ஆட்டம் கலை நிகழ்ச்சியும், விருதுநகர் ராஜபாளையம் ராஜ் கலைக்குழுவினரின் தப்பாட்டம் கலை நிகழ்ச்சியும், சென்னை கஜேந்திரன் கலைக்குழுவினரின் பொய்க்கால் குதிரை ஆட்டம் கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சிகளில் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மாலை 6 மணி முதல் நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியினை ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.