திருவள்ளூர் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டம்: அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்
Sep 18 2025
38

திருவள்ளூர், செப். 16–
திருவள்ளூர் மாவட்டத்தில் அன்புக்கரங்கள் திட்டத்தை அமைச்சர் சா.மு. நாசர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி வீரராகவபுரம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பெற்றோரை இழந்த 84 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000க்கான அடையாள அட்டைகள் மற்றும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாமில் 35 மாணவர்களுக்கு ரூ1.47 கோடி மதிப்பிலான கடன் உதவிக்கான காசோலைகளை கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் வழங்கினார்.
அப்போது அமைச்சர் கூறியதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் இத்திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரை பள்ளிப் படிப்பை எந்தவிதத் தடையும் இல்லாமல் தொடர்வதை உறுதி செய்வதாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தங்களின் உறவினர்களின் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதியுதவி, அவர்களின் கல்விச் செலவுகளுக்காக நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம், அந்தக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்கான செலவுகள் பூர்த்தி செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் பூவிருந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், பென்னோரி சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திர சேகர், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர மன்ற தலைவர் என்.கே.மூர்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ர. சீனிவாசன், உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தென்னரசு, தனியார் கல்லூரி நிறுவனர் வெங்கடேஷ் ராஜா, குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் உறுப்பினர் ஜெயந்தி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் திரளான மாணவ மாணவியர்கள் கலந்துக் கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?