காலை நேரம்.. கடை திறக்க வேண்டிய பரபரப்பில் குளித்து தலை துவட்டியபடியே ..காலை சிற்றுண்டிக்கான அழைப்புக்கு காத்திருந்தான் மதி.சுரத்தையே இல்லாமல் சட்னி தாளித்தபடியே முகம் வாடி நிற்கும் மனைவியைப் பார்த்து துனுக்குற்றான். கல்யாண மெருகு குலையாத ரதி..'இந்த வீட்டுக்கு வலதுகால் எடுத்து வைத்த ஒருமாத காலமாக இந்த குடும்பமே இவளை தலையில் வைத்து தாங்குகிறது...அதிகாலை எழும்வரை கலகலப்பாக இருந்தவள் இப்போது சோகமுகம் காட்டும் காரணம் என்னவோ.?' இப்போது எதையும் கேட்டு தனது மனநிலையையும் விரக்திக்கு உள்ளாக்கிக் கொள்ளாமல்..கடமையென சாப்பிட்டு கடைக்குச் சென்றான் மதி. காலை நேர வியாபார பரபரப்பு அடங்கியவுடன்..அலை பேசியில் தொடர்பு கொண்டவனுக்கு சிக்கல் புரிந்தது ..அதற்கான தீர்வுதான் தெளிவாக தெரியவில்லை. அதாவது மதியின் மனைவி ரதி..கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்..வீட்டில் ஆடு..மாடு..தோட்டம்..தொரவு என ஓட்டமான விவசாயக் குடும்பம்..மதியின் குடியிருப்போ வாடகைவீடு..சொந்த மனை வாங்கி இருந்தாலும்....கிணற்றில் விழுந்த பாறாங்கல்லாய் பணத்தை முடக்க அவனது வியாபார மூளை ஒத்துழைக்காததால் வீடு கட்டும் வைபவத்தை சற்றே தள்ளிப்போட்டு இருக்கிறான்...ரதியோ 'கரவைச்சாணி கூட கைகூசாமல் எடுத்துவர முடியல.. சொந்தமாக ஒரு கன்றுக்குட்டி யாவது வாங்கிக்கொடுங்க..உங்க முதலை காவந்து பண்ணி பால் மாடாக்கி காட்டறேன்'னு மல்லுக்கு நிற்க..வீட்டு உரிமையாளரோ..நாய்.பூனைக்கூட என்ன கிளி..புறா கூட வளர்க்க ஆசைப்பட்டா இப்பவே காலிபண்ணிகிட்டு போகலாம் எனும் கறார் பார்ட்டி...இப்பிரச்சினையை எப்படி தீர்ப்பது என மண்டையை குடைந்து கொண்டவன்..ஒரு வழியாக இரவு பிளாஸ்டிக் குடத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான். மாடு வளர்க்க யோசனை ஏதாவது சொல்வான் என சாப்பாட்டை எடுத்து வைத்து முகத்தைப் பார்த்தபடியே நின்ற மனைவியிடம்.."ரதி..இன்னும் ரெண்டு வருசத்துல நம்ம பேங்க் டெபாசிட் ரெட்டிப்பாகி பணம் கைக்கு வந்திடும்..உடனே சொந்த வீட்டை கட்ட ஆரம்பிச்சுடுவோம்...உனக்கு பிடிச்ச மாதிரி தோட்டம்..மாடு வளர்க்க கொட்டகை எல்லாம் அமைச்சுக்க...இப்போ இந்த குடத்துல வீட்டுல மிஞ்சுற பழையசாதம்..நீச்சுத்தண்ணீ..உளுந்துத்தோல்...எல்லாத்தையும் சேர்த்துக்க.நான் நம்ம கடையில இருந்து தவிடு புண்ணாக்கு கொடுத்தனுப்பறேன்.தலைச்சுமை கிழவிகிட்ட வழமையாக கீரை வாங்குப்போது..அகத்திக்கீரை வாங்கிக்க...தினம் ஒருதடவை நீயே கொண்டுபோயி...சாணி எடுக்குற தோட்டவீட்டு தொட்டியில சேர்த்துடு..உன் கையாலயே கீரைக்கட்டை கொடுத்துட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வாயேன்..ஓசிச்சாணி எடுத்து வாசல் தெளிக்கறோமேங்கற குற்ற உணர்வும்..போகும்..பசுக்களுக்கு பசியாத்துன திருப்தியும் கிடைக்கும்..கணவனின் அறிவிப்பில் மன அழுத்தத்திற்கான தீர்வு கிடைத்ததில் நிம்மதி அடைந்தாள் ரதி.!*--------*
அரும்பூர். க.குமாரகுரு, மயிலாடுதுறை*