நம்பிக்கை

நம்பிக்கை


        

  "விஜி! எத்தனை நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்.இன்னைக்காவது நகையை வாங்கிட்டு வந்துடிடி" என்றாள் அம்மா பர்வதம்.


     "போறேன்மா. தனியா போகணுமேன்னு பார்க்கிறேன். நீயும் வாயேன்.ரெண்டு பேருமா சேர்ந்து போலாம் " என்று விஜி சொல்ல "ஏகப்பட்ட வேலை இருக்கு .நீ போயிட்டு வந்துடுடி செல்லம்" என்றாள் பர்வதம்.


       "சரி போறேன்.பஸ் ஸ்டாண்டு எதிர்ல அந்தப் பெரிய நகைக் கடை தானே "என்று விஜி கேட்க " அதேதான் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துப் போயிட்டு வா. காலம் கெட்டுக் கிடக்குது" என்று எச்சரித்தாள் பர்வதம் .


        பக்கத்து வீட்டில் படுத்துக் கிடந்த சுரேஷின் காதுகளில்

பர்வதமும் விஜியும் பேசியதெல்லாம் தேனாய்ப் பாய்ந்தது.'இந்த சந்தர்ப்பத்திற்காகத் தானே இவ்வளவு நாள் காத்திருந்தேன்.

முறைப் பையனான என்னை விட்டுட்டு கூடப் படிக்கிற பையனை காதலிக்கிறதா என்னைக்கு நீ சொன்னியோ அன்னைக்கே நான் உனக்கு எதிரியாயிட்டேன்.'


      ' நகை இருந்தால் தானே உனக்கு கல்யாணம் நடக்கும்?

 நகை திருடு போயிட்டா உன்னை எவன் கட்டிக்குவான்? உன் அம்மா என் காலில் விழுந்து 'என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோ ' ன்னு கெஞ்சணும் .நகையை உங்க வீட்டுலேயே திருடலாம்னு பார்த்தா பக்கத்துலயே இருக்கிற என் மேல கண்டிப்பா சந்தேகம் வரும். உனக்காக நகைக்கடை வாசலிலேயே அடையாளத்தை மறைத்தபடி நகையைப் பறிக்க நான் ரெடியா இருக்கேன் 'என்று

மனதிலேயே திட்டமிட்டான் சுரேஷ். 


        சிறிது நேரம் கழித்து வீட்டின் கதவு தட்டப்பட்டது. யாரது என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தான் சுரேஷ். விஜிதான் நின்றிருந்தாள்.


        "என்ன விஜி என்னைத் தேடி வந்திருக்கே? என்ன விஷயம்? "

என்று கடுப்பாகக் கேட்டான் சுரேஷ்.


     "மாமா! அம்மாவும் நானும் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து நகைச்சீட்டு கட்டினோம்.நகைக் கடையில் ரெண்டு நாளுக்கு முன்னாலேயே வரச் சொன்னாங்க.

துணைக்கு அம்மா வர முடியாததால போக முடியல.

நீ கூட வந்தா போய் வாங்கிட்டு வந்துடலாம். வேற யாரையும் நம்ப முடியல மாமா "என்று அவள் கூறியதும் சவுக்கடி பட்டது போல உணர்ந்தான் சுரேஷ்


      நகையைக் கொள்ளையடித்து அவளைப் பழி வாங்க எண்ணிய தான் எங்கே தன்னை முழுமையாக நம்பும் விஜி எங்கே என்று வெட்கித் தலை குனிந்து மனம் திருந்தியவனாக விஜியின் பின்னால் சென்றான் சுரேஷ். 



மு. மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903





.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%