அந்தப் பார்ஸல் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தருக்குப் பணி நேரம் இரவு பனிரெண்டு மணி வரை.
மதியம் ஒரு மணிக்கு வந்து, இரவு பனிரெண்டு வரை ஓயாது பார்ஸல் பெட்டிகளுக்கு நெம்பர் போட்டு அடுக்கி, அவற்றை பார்ஸல் வேன்களில் ஏற்றி அனுப்பி விட்டுத்தான் அறைக்குச் செல்வான்.
நேரம் கடந்து போய் விடுவதால் உறக்கம் கூட அவனிடம் வருவதில்லை. புரண்டு புரண்டு கிடந்து விட்டு அதிகாலை வேளையில் அசந்து உறங்குவான்.
வாழ்க்கை மீது பிடிப்பே இல்லாமல் விரக்தி மனநிலையில் இருப்பதால் சாப்பிடக் கூடப் பிடிப்பதில்லை.
ஒல்லியான உடல்வாகும், ஒட்டிப் பான கன்னங்களுமே அவன் அடையாளமாயின.
அன்று பார்ஸல்கள் குறைவாக இருந்ததினால் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே அறைக்குத் திரும்பினான்.
இரவு, மொபைல் ஒலிக்க, எடுத்தான்.
"சுந்தர்.... என்ன தூங்கிட்டியா?" எதிர்முனையில் பார்ஸல் ஆபீஸ் சூப்பர்வைஸர் கோகுல்.
"இல்ல சார்... சொல்லுங்க சார்"
"ஒண்ணுமில்லை சும்மாதான் கூப்பிட்டேன்... பேசலாமா?" சூப்பர்வைஸர் கேட்க,
"இதெல்லாம் கேட்கணுமா சார்... தாராளமாய்ப் பேசலாம் சார்..." என்றான் சுந்தர்.
தொடர்ந்து மனிதனின் மனச்சோர்வு பற்றியும், மனத்தளர்வு பற்றியும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் பேசினர். கடைசியாய் முடிக்கும் போது, "என்னமோ தெரியலைப்பா... மனசு ரொம்ப பாரமாயிருந்திச்சு... யார் கிட்டே பேசினா அந்த பாரம் குறையும்ன்னு யோசிச்சேன்... டக்குன்னு உன் ஞாபகம்தான் வந்திச்சு... அதான் கூப்பிட்டேன்... நான் நெனச்ச மாதிரியே மனப் பாரமும் குறைஞ்சு போச்சு" என்று சூப்பர்வைஸர் சொல்ல,
"அது செரி... ஏன் சார் என்னைய நெனச்சீங்க?"
"பார்ஸல் ஆபீஸ்ல நீ வேலை செய்யும் போது பார்த்திருக்கேன்... பார்ஸல் பெட்டிகள் அளவுக்கதிகமா குவிஞ்சிருந்தாலும் சரி... கொஞ்சமாய் இருந்தாலும் சரி... நீ ஒரே முக பாவத்தோடதான் வேலை பார்க்கறே... ஐ லைக் தட் கெரி மச்"
அவ்வப்போது அந்த சூப்பர்வைஸர் அழைப்பார், பேசுவார், "தேங்க்ஸ்" சொல்லி விட்டு போவார்.
இப்பெல்லாம் சுந்தர் மனதில் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு உயர்ந்திருந்தது.
"என்னை விடப் படித்தவர்... எனக்கு மேலதிகாரியாய் இருப்பவர்... அவரே தன்னோட மனக் கஷ்டத்தை என்னோட பேசிக் குறைச்சுக்கறார்...ன்னா நான் ஒண்ணும் யாருக்கும் பிரயோஜனம் இல்லாதவனல்ல... எனக்கும் ஒரு வேல்யூ இருக்கு!... நானும் யாருக்கோ... எவ்விதத்திலோ பயனாகிறேன்"
இப்போதெல்லாம் சுந்தர் எப்போதுமே மகிழ்ச்சியாகவும், கல...கலப்பாகவும் இருக்கான்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?