நாமக்கல் மாவட்டத்தில் ஆட்டோ, டாக்ஸி பெண் ஓட்டுநர்கள் 14 பேருக்கு ரூ.14 லட்சம் மானியம்: மு.க.ஸ்டாலினுக்கு பெண் ஓட்டுநர்கள் நன்றி
Nov 23 2025
13
நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம், 14 பெண் வாகன ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ, டாக்சி வாங்க ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.14 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் 20 நல வாரியங்களில் 93,688 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி உதவி, ஓய்வூதியம், இயற்கை, விபத்து மரணம், ஊனம், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் 1,98,113 பயனாளிகள் ரூ.215.55 கோடி பெற்றனர்.
வாகனம் வாங்க மானியம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் வீட்டு வசதி திட்டத்தின்படி அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதுடன், தொழிலாளர்கள் தனியாக வீடு கட்ட ரூ.4 லட்சம் மற்றும் குழந்தைகள் உயர்கல்விக்கான ரூ.50,000 உதவியும் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பதிவு பெற்ற பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், 13 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ, 1 பெண் ஓட்டுநருக்கு டாக்ஸி
வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பயனாளி நெகிழ்ச்சி
இது குறித்து திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த பயனாளி பிரேமா கூறுகையில்,
“எனக்கு ஒரு மகன், ஒரு மகள். கணவர் இறந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஒரு நிலையான தொழில் தேவைப்படுவதை உணர்ந்து, நல வாரியத்தினை தொடர்புகொண்டேன். ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்ததால் உறுப்பினராக பதிவு செய்திருந்தேன்.
இப்போது அரசு வழங்கிய ரூ.1 லட்சம் மானியத்தின் உதவியால் ஆட்டோ வாங்கி, நாளில் சுமார் ரூ.700 வரை சம்பாதித்து வருகிறேன். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற சுயதொழில் அவசியம். எங்களைப் போன்ற எளிய பெண்களுக்கு இது பெரிய உதவியாக உள்ளது. இந்த திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
----------
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?