நாள்தோறும் நடைப்பயிற்சி

நாள்தோறும் நடைப்பயிற்சி

நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருவதில் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் கோவையில் நான் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தபோது வழியில் ஒரு மாடு ஒன்று பாதை ஓரத்தில் நின்று கொண்டு இருந்தது. கோவையில் தெரு நாய் தொல்லையைப் போல் தெருவில் திரியும் மாடுகளின் தொல்லையும் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. திடீரென்று தெருவின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு சர்வ சாதாரணமாக பாதையைக் கடக்கும். அப்போது வாகனம் ஓட்டுபவர்கள், பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். வாகனம் ஓட்டுபவர்கள் போன்று நானும் பாதிக்கப்பட்டேன். தெரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மாடு நான் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென முட்டித் தள்ளியது. முட்டித் தள்ளிய வேகத்தில் அவ்வழியாக சென்று கொண்டு இருந்த கார் பானட்டின் மீது விழுந்தேன். நல்லவேளை போக்குவரத்து நெரிசல் காரணமாக கார் மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருந்தது. பானட்டின் மீது விழுந்ததும் அருகில் இருந்தோர் ஓடி வந்து தூக்கி நிறுத்தி ஏதேனும் அடிபட்டு விட்டதா என்று கருணை உள்ளத்துடன் விசாரித்தனர். நல்ல வேலை எனக்கு அடிபடவில்லை. மாடு முட்டியதில் தான் லேசான வலி இருந்து. கார் பானட்டின் முன் விழப்போவதை அறிந்த நான் தலையை தூக்கிக் கொண்டேன். என் இரு கைகளால் கார் பானட்டைப் பற்றி கொண்டு நின்று சமாளித்தேன். ஆனால் நான் கார் பானட்டின் மீது மோதிய வேகத்தில் கார் பானட்டின் முன் பகுதி சிறிய அளவில் உள்ளே அமுங்கி விட்டது.

உடனே காரை ஓட்டி வந்தவர் காரை நிறுத்திவிட்டு அவசரமாக ஓடி வந்து கார் பானட்டைப் பார்த்தார். எனக்கு அடிபட்டு விட்டதா என்பதைப் பற்றியெல்லாம் அவர் எள்ளளவும் கண்டுகொள்ளவில்லை. ஏதேனும் அடிபட்டு விட்டதா என்று கூட விசாரிக்கவில்லை. கார் பானட்டின் பகுதி சிறிது அமுங்கி இருந்ததில் தான் அவர் கவனம் எல்லாம் இருந்தது. உடனே அவர் உங்களால் தானே இப்படி ஆயிற்று. ஆகவே இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் ஐயாயிரம் தர வேண்டுமென்று வாதிட்டார். அதற்கு நான் வேண்டுமென்றே விழவில்லையே மாடு முட்டித் தானே உங்கள் கார் முன் விழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்று கூறினேன். அதற்கு அவர் மாடு முட்டியது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. கார் முன் விழுந்து காருக்குச் சேதத்தை ஏற்படுத்தியது நீங்கள் தான். ஆகவே இழப்பீடு தந்தே ஆக வேண்டும் என்றார். அருகில் இருந்தோர், ஏனய்யா... மாடு முட்டி அவர் விழுந்தது பற்றிக் கவலைப்படாமல் அவரிடம் இழப்பீடு கேட்பது நியாயம் தானா என்றனர். இருப்பினும் அவர் சமாதானம் அடையவில்லை. இழப்பீடு கேட்பதிலேயே கறாராக இருந்தார். அப்போது அங்கே கூட்டம் கூடி விட்டதால் போக்குவரத்து முற்றிலும் நின்றுவிட்டது. அந்த இடத்தில் காவல்துறையினர் யாரும் இல்லை. அப்போது பின்னால் நின்றிருந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் நடந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்களிடம் கேட்டறிந்து அந்தக் கார் ஓட்டுனரிடம், ஏன் சார் அவர் மாடு முட்டி அவர் கார் மேல் விழுந்த நிலையில் அவர் மீது அனுதாபப்படாமல், மனிதாபிமானம் இல்லாமல் இழப்பீடு கேட்கிறீர்களே இது சரிதானா என்றார். என்ன சொல்லியும் அவர் விடாப்பிடியாக இழப்பீடு கேட்பதிலேயே குறியாக இருந்தார். அதற்கு எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் அவரிடம் கோபமாக நீங்கள் வேண்டுமானால் இன்சூரன்ஸ் கிளைம் செய்து கொள்ளுங்கள். அவர் இழப்பீடு தரவேண்டிய அவசியம் இல்லை என்றார். உடனே அவர் ஒன்றும் பேசாமல் பதட்டத்துடன் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். எனக்குத் தக்க சமயத்தில் சமயோசிதமாகப் பேசி அவரிடம் இருந்து என்னை விடுவிக்க உதவிய அவருக்கு மனதார நன்றி கூறிவிட்டு நடைபயிற்சியை தொடர்ந்தேன்.



அன்புடன்

உ.மு.ந.ராசன்கலாமணி

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%