நிலம் கையகப்படுத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி: 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை: நெடுஞ்சாலை, சிப்காட் ஆகியவற்றுக்கு நிலம் கையகப்படுத்தியதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரில் சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. சென்னை கே.கே.நகர் லட்சுமணசாமி சாலையை சேர்ந்தவர் மகாவீர்.
இவர் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் நகைக் கடை, பைனான்ஸ் நிறுவனம், மருத்துவஉபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று காலை 7 மணியளவில் 2 வாகனங்களில் வந்த 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெருவில் வசித்து வரும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் கலைச்செல்வன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அம்பத்தூர் திருவேங்கடா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ் என்பவரது வீடு, கோடம்பாக்கம் விஓசி 2-வது தெருவில் உள்ள தனியார் நிறுவனம், கீழ்ப்பாக்கம் வாக்டல்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் இரும்பு வியாபாரி நிர்மல்குமார் வீடு, கே.கே.நகர் முனுசாமி சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் ஒருவரின் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எம்ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், சவுகார் பேட்டை கந்தப்ப முதலி தெருவில் உள்ள பைனான்ஸ் அதிபர் சுனில், வடபழனி 2-வது மெயின் ரோட்டில் நிதி நிறுவன அதிபர் ராகேஷ் வீடு உட்பட சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக இந்த சோதனை அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் வீடுகளைக் குறிவைத்தே நடந்தது.
சோதனை குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், “2022-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதாவது அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவலறிக்கையின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.
அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் நெடுஞ்சாலைகள் அமைக்க நிலம் கையப்படுத்தியதில் அரசு நிலத்தையே வேறொருவருக்கு பட்டா போட்டு, அவரிடமிருந்து அந்த நிலத்தை நெடுஞ்சாலை அமைக்க கையகப்படுத்தியது போல போலி ஆவணங்கள் தயார் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக காஞ்சிபுரம் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாகவும் சோதனை நடைபெற்றது” என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே மேற்கொண்டு முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.