நீலகிரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா பார்வையிட்டார்
Nov 24 2025
12
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தீவிர திருத்த நடவடிக்கையின் போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெற்றுக்கொள்வதும், அவற்றை மின்னணு வடிவில் பதிவேற்றுவதும் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, உதகமண்டலம், கூடலூர், குன்னூர் சட்டமன்றத் தொகுதிகள் சார்பில் வாக்காளர்களிடமிருந்து திரும்பப்பெறப்பட்ட படிவங்கள் பதிவேற்றப்படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் உதகை நகராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு சென்று பணிகளை மதிப்பீடு செய்தார்.
உதகை நகராட்சி பட்பயார் பகுதியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டு படிவங்களை வீடு வீடாக திரும்பப் பெறும் பணிகளையும் அவர் நேரில் பார்த்தார். மேலும், வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை தாமதமின்றி சமர்ப்பிக்க,
நகராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பதிவேற்ற பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் உதவி மையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் அடையாள அட்டை, படிவ பூர்த்தி, சந்தேக தீர்வு உள்ளிட்ட பணிகள் ஆகியவற்றையும் அவர் ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் தங்களுக்கான தேர்தல் தொடர்பான சந்தேகங்களை 1950 என்ற உதவி எண்ணை தொடர்புகொண்டு தீர்த்துக்கொள்ளலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, உதகை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் டினுஅரவிந்த், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) ராதாகிருஷ்ணன், உதகை நகராட்சி கமிஷனர் கணேஷன், தேர்தல் தனி வட்டாட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?