பாலைவன ரோஜா

பாலைவன ரோஜா


-முனைவர் என். பத்ரி


        அது அந்த நகரின் ஒரு பிரபல பள்ளி.ஷியாம் அந்த நகரின் ஒரு பிரபல ஓட்டல் தொழிலதிபரின் அப்பா.தன்னுடைய இறுதிக் காலத்தில் பையனுடன் வந்து ஒட்டிக் கொண்ட ஷியாமுக்கு அந்த பள்ளியைப் பற்றி ஒன்றும் தெரியாது.

                            பல பெற்றோர்கள் அந்தப் பள்ளியின் முதல்வரைப் பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஷியாம் தன் சமூக அந்தஸ்துக் காரணமாக நேரில் பள்ளி முதல்வரின் அறைக்குள் சென்றார். உள்ளே முதல்வர் இருக்கையில் உட்கார்ந்திருந்த கவிதாவை பார்த்த அவர் அதிர்ந்து தான் போனார்.பல வருடங்களுக்குப் பிறகு அவர் அவளை இன்று எதிர்பார்க்காமல் பார்க்கிறார்.கவிதா பார்ப்பதற்கு இப்போது சற்று ஒல்லியாகியிருந்தாள். காதோரம் இலேசான நரை தோன்றத் தொடங்கியிருந்தது.

               கோல்டன் பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியை தன் கூர்மையான மூக்கின் மேல் சற்றே அழுத்தியவாறு,’வாங்க உட்காருங்கள்’ என்று அமைதியாகச் சொன்னாள். ’என்ன வேண்டும்?’ என்று அவரைக் கேட்டாள் கவிதா பள்ளி முதல்வராக.

                  ’என்னுடைய பேரன் முருகேஷ் இவன். இவனை எல்.கே.ஜி.யில் உங்கள் பள்ளியில் சேர்க்க நீங்கள் உதவ வேண்டும்’ என்று தன்னுடைய சன்னக் குரலில் மெதுவாகச் சொல்லியபடியே தன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான். அதை அமைதியாக வாங்கிக் கொண்டாள் கவிதா.

                   எப்பொழுதும் அதிர்ந்து பேசும் ஒரு குரல் இப்பொழுது இவ்வளவு மென்மையாக ஒலிப்பதைக் கேட்ட கவிதாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ’ஒரு காலத்தில் என்னை இந்த ஷியாம் மட்டுமல்ல, இவனுடைய அக்கா, அப்பா, அம்மா, எல்லோரும் அப்பா இல்லாத என்னை எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள்? எப்பொழுதும் பணம், பணம் என்று வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார்கள். இவனை இப்பொழுது பழிவாங்கி விடலாமா?’ என்று கவிதாவின் உள் மனம் சொன்னது. ஆனால் அவள் படித்த படிப்பு அவளை, ’கண்ணியமாக நடந்து கொள்’ என்றது.

                    30 வருடங்களுக்கு முன்னால் கவிதாவின் கணவன் ஷியாம். அவனும் அவன் குடும்பமும் கவிதாவுக்கு செய்த கொடுமைகள்தான் எத்தனை? ஒரு ஆறு மாத காலம் பொறுமை காத்த கவிதா,’நீயும் வேண்டாம். உன்னுடைய குடும்பமும் வேண்டாம்.’ என்று நீதிமன்றப் படியேறி விவாகரத்து வாங்கி விட்டாள். ஒரே துனையாக இருந்த அம்மாவையும் இழந்த கவிதா, பல்வேறு பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிக்கான நேர்காணலுக்குச் சென்றாள்.

          இந்த பள்ளியை நடத்தி வந்த யுவராஜ்தான் ஆசிரியர் பணிக்கு வந்த இவள் மேல் அக்கறைக் கொண்டு, தன்னுடைய வயதான அம்மாவிற்கு அவளை உதவியாக பணிக்கு அமர்த்தினான். அவன் அம்மாவின் பரிந்துரையின் பேரில் அவளையே மனைவியாக்கியும் கொண்டான்.

                   அவன்தான் அந்த பள்ளியின் நிர்வாகி. கூடுதலாக அவனுக்கு கணினி உதிரி பாகங்களை விற்கும் கம்பெனி ஒன்றும் உள்ளது. விரைவில் ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த கவிதா அந்தப் பள்ளியின் நிர்வாகியானாள். அந்தப் பகுதியிலேயே அது பிரபல பள்ளியாக அவளது உழைப்பால் மாறியது.

                    விவாகரத்தான பிறகு கவிதாவை பற்றிக் கவலைப்படாத ஷியாம்தான் இன்று கவிதாவின் உதவியைக் கேட்டு வந்திருக்கிறான். ’அவள் கொடுப்பாளா? மாட்டாளா?’ என்ற சஞ்சலம் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. அவன், ’நான் செய்ததெல்லாம் தவறுதான். நான் என்னுடைய பெற்றோரின் பேச்சைக் கேட்டு அப்படி செய்து விட்டேன்’ என்று சொல்லி மன்னிப்பு கேட்டான் ஷியாம். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கவிதா, உள்ளே இருந்த அலுவலக ஊழியரை அழைத்தாள்.’சார்’கிட்டஅட்மிஷன் ஃபார்ம் ஒன்னு கொடுத்து ஃபில் அப் பண்ணி வாங்கிக்குங்க.’என்றாள்.’நீங்கள் மண்டே வந்து ஃபீஸ் கட்டிடுங்க’என்றாள் ஷியாமிடம்.

               தன்னுடைய அடுத்த பணியை பார்க்கத் தொடங்கினாள் கவிதா. ஏற்ற கோணத்தில் இருந்த கவிதாவின் அறையிலிருந்து வெட்கத்துடன் வெளியேறினான் ஷியாம். கம்பீரமாக உள்ளே சென்ற தொழிலதிபர் கவலையுடன் வெளியே வருவதைப் பார்த்தவர்கள் அவர்களுக்குள் குழம்பித்தான் போயிருந்தார்கள்.

               இவன் பாலைவனமாக்கிய அவள் வாழ்க்கை இன்று ஒரு ரோஜாத் தோட்டமாக மாறி உள்ளது என்பது அவன் மனதுக்கு மட்டும்தானே தெரியும் பாலைவனத்தில் ரோஜாக்களும், பசுமையான தோட்டத்தில் முட்களும் இருக்கலாம். நாம் தான் பார்த்து வாழ்க்கையை கொண்டு செலுத்த வேண்டும் இது எனக்கு கவிதாவின் வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம்.உங்களுக்கும்தானே?


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%