புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்று என்டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் செயல்படும் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அசோக் சர்மா தலைமையிலான குழுவினர் பிஹாரின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பாலை சேகரித்து ஆய்வு செய்தனர்.
இதன்படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசாராய், ககாரியா, கதிஹார், நாளந்தா ஆகிய 6 மாவட்டங்களில் 40 தாய்மார்களின் தாய்ப்பால் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அனைத்து தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மூத்த மருத்துவர்கள் அருண்குமார், அசோக் கோஷ் கூறியதாவது: கங்கை நதியை ஒட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் தாய்மார்களின் தாய்ப்பாலை பரிசோதனை செய்தோம். அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டது. கங்கை நதி நீர் மற்றும் நிலத்தடி நீரில் யுரேனியம் கலந்திருக்கிறது.
இப்பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் நிறத்துக்காக ரசாயனம் செய்யப்படுகிறது. இதில் ஈயம் உள்ளது. இதன் காரணமாக சில மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருக்கிறது. எனவே பெண்கள் குடிநீர் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் தூள் உள்ளிட்டவற்றில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய (என்டிஎம்ஏ) மூத்த விஞ்ஞானி தினேஷ் கே அஸ்வால் கூறும்போது, ”உலகம் முழுவதும் மண்ணில் யுரேனியம் இருப்பது இயல்பானது. இதன் காரணமாகவே பிஹாரின் குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. இதனால் குழந்தைகள், பெண்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவுக்கு குறைவாகவே யுரேனியத்தின் அளவு உள்ளது. பெண்கள் அச்சமின்றி குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கலாம்” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?