பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் ரூ.75 லட்சம் செலவில் திருப்பணிகள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கினார்
Sep 27 2025
22

சென்னை, செப்.25–
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் ரூ.74.30 லட்சம் மதிப்பீட்டிலான 11 திருப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகா மண்டபம் கட்டுமானப் பணிகள் மற்றும் திருக்குளம் சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:–
கோயிலில் ஏற்கனவே ரூ. 52 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபத்தினை உபயதாரர் சத்தியமூர்த்தி கட்டி தருகின்றார். அந்த பணியும் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் திருக்குளத்தை சீரமைக்கின்ற பணியும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள்முதல் இன்று வரை 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
புரட்டாசியாக இருந்தாலும்
குடமுழுக்கு நடந்தது...
புரட்டாசி மாதமாக இருந்தாலும் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இது தமிழக முதல்வரின் ஆட்சியில் எல்லா நாட்களுமே எல்லோருக்கும் உகந்த நாள் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. ரூ.8,000 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, 2,15,384 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றாலும் அதற்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த திருக்கோயிலில் தான் முதன்முதலாக திருவிளக்கு பூஜை திட்டத்தை தொடங்கி வைத்தோம். மருத்துவ மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல இணை ஆணையர் ஜ.முல்லை, துணை ஆணையர் இரா.ஹரிஹரன், கோயில் செயல் அலுவலர் க.பிரபாகர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், கிருஷ்ணகுமார், ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?