பெற்றோர் பெருமை

பெற்றோர் பெருமை


-பாவலர் கருமலைத்தமிழாழன்


பெற்றயென்றன் அழுகுரலைக் கேட்ட தாயோ

பெருவலியின் துடிப்பெல்லாம் இன்ப மாகி

உற்றதன்னின் கணவனவன் முகத்தைப் பார்த்தே

உகுத்திட்டாள் புன்னகையை வெற்றி யாக !

சற்றுமதில் குறையாத பூரிப் போடே

சந்ததியைத் தந்ததற்கு நன்றி தன்னைச்

சுற்றத்தார் முன்னிலையில் தந்தை சொல்லிச்

சூட்டிட்டார் புகழ்மொழியைக் கண்க ளாலே ! 


நோய்நொடிகள் அண்டாமல் வளர்ப்ப தற்கு

நோன்பிருந்தார் பத்தியத்தைக் கடைபி டித்தார்

வாய்மணக்கப் பால்புகட்டித் தமிழ ளித்தார்

வான்நிலவை அழைத்துணவை ஊட்டி விட்டார் ! 

ஓய்வின்றி அடுப்படியில் உழன்ற போதும்

ஒருகண்ணை என்மீதே வைத்தி ருந்தார்

தூய்மையான அன்புதனை ஒழுக்கப் பண்பை

துயர்துடைக்கும் நேயத்தை விதைத்தார் தாய்தாம் !


கண்டிப்பை அன்புதன்னில் கலந்து தந்தை

கல்வியினை அளித்தென்னைச் சிறக்க வைத்தார்

கொண்டிருந்த பாசத்தைக் காட்டி டாமல்

கொள்கையுடன் வாழயென்னைப் பயிற்று வித்தார் !

மண்மீதில் கற்பிக்கும் ஆசா னாக

மாப்புகழைப் பாவலனாப் பெறுவ தற்கும்

கண்போன்ற பெற்றோர்தாம் வேராய் நின்றார்

கடவுளுக்கும் மேலவரின் பெருமை என்பேன் !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%