பொம்மைப் பூனை

பொம்மைப் பூனை


வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் ஆரம்பித்த அர்ச்சணை தான். இதோ வீடு வரப்போகிறது இன்னும் முடிந்த பாடில்லை.


"ஒனக்கு வாய்தான் வலிக்காதா?" கேட்டான் வசந்தன்.


"வாய் என்ன மனசும்தான் வலிக்கிறது" என்ன செய்யட்டும்? இது வினயா.


"ஒரு மண்ணும் செய்ய வேண்டாம். வாய மூடிட்டு வேலையப் பாரு" என்றான் வசந்த்.


எல்லாம் நேராக பக்காவாக பக்குவமா இருக்கணும் வினயாவிற்கு.


அது அதை அப்படியே ஏற்றுக் கொண்டு போகவேண்டும் வசந்திற்கு. அலசி ஆராய்வது வேஸ்ட் என்பான்.


அப்படி என்ன நடந்து விட்டது?

இரண்டு பேரும் ஒரு பெரிய மாலில் முக்கியமான பிராண்டட் அயிட்டங்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.


ஏதோ ஒரு பொம்மையை அழகாக கலராக இருப்பதால் கடைசியில் வாங்கிவிட்டான்.


நிஜமாகவே அது யானை விலையாக இருந்தது. வினயா வேண்டாம் என்றால் கேட்கவில்லை.


ஒரு பக்கம் பொம்மை பிடித்திருந்தது. அடுத்தது ப்ரஸ்டீஜ் வேறு. வாங்கி விட்டான்.


அது ஒன்றுமில்லை. ஒரு பூனைக்குட்டி பொம்மை. யாரேனும் இரைந்துக் கத்தினால் அதுவும் கத்தும். சத்தம் இனிமையாக இல்லைதான்.


வாங்கிக்கொண்டு வந்த இரண்டு நாட்கள் அமர்க்களப்பட்டது.


பக்கத்து எதுத்த வீட்டுக் குழந்தைகள் இவர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினார்கள்.


வசந்திற்கே மிகவும் நாராசமாகத்தான் இருந்தது. பொம்மையை குழந்தைகள் அசந்த சமயம் பார்த்து பீரோவின் மேல் பகுதியில் எடுத்து வைத்துவிட்டான்.


காசைக் கொடுத்து தேளைக் கொட்டிக் கொண்டது போலானது.


"எங்கடா பூனை?" பக்கத்து வீட்டு நண்பன் கேட்க, "எங்கப்பா அதக் கொண்டுபோய் காட்டில விட்டுட்டாங்கடா" என்றது குழந்தை.


இரண்டு நாள் சாதாரணமாக போனது. அன்று வினயாவின் அம்மா மங்களம் வந்திருந்தாள்.


அன்று இரவு மகள் வீட்டிலேயே தங்கினாள். பேரன் பேத்திகள் மூலம் பூனையின் மொத்தக்கதையும் தெரிந்து கொண்டாள்.


இரவு உறங்குமுன் அந்தப் பூனையைத் தான் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் உறங்கிப் போனாள்.


நடு இரவில் திடீரென்று அடிவயிற்றிலிருந்து இரண்டு தும்மல் போட்டாள் மங்களம்.


அவ்வளவுதான் பீரோ மேல் இருந்த பூனைக் கத்த ஆரம்பித்தது. பொம்மை ஞாபகத்துக்கு வரவில்லை. "என்னது பக்கத்துல பூனைக் கத்துது? எலி இருக்குமோ? பூனை மேலே தாவிடுமோ?


கொள்ளை பயத்துடன் போர்வையை இழுத்து மூஞ்சியையும் மூடிக்கொண்டாள். கை கால்கள் லேசாக நடுங்கின. கொஞ்ச நேரம் அமைதியானது.


இதோ மற்றுமொரு தும்மல்! சத்தம் கேட்டதும் பூனையின் அலறல். அவ்வளவுதான். மங்களம் எழுந்து வந்து லைட்டையும் போட்டு ஹால் சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள்.


கொலை நடுக்கமாக இருந்தது மங்களத்திற்கு. அதிகாலை நான்கு மணி. அநேகமாக எல்லோரையும் எழுந்துவிட்டார்கள்.


மங்களம் நடந்தவற்றை சொன்னதும் வசந்தனுக்கும் வினயாவிற்கும் புரிந்தது. எப்படி சொல்வது என்று தெரியாமல் இருவரும் ஒரு நிமிடம் கழித்து மளக்கென்று சிரித்தனர். அடக்கமுடியாமல் சிரித்தான் வசந்தன்.


குழந்தைகளுக்கும் புரிந்து விட்டது. தங்கள் பிரிய பூனை வீட்டிற்குள்தான் இருக்கிறது என்று ஒரே சந்தோஷம்.


வினயா நிதானமாக அம்மாவிற்கு எல்லாம் சொன்னதும் தன் சத்தமான தும்மலால்தான் பொம்மைப் பூனை கத்தியதைக் கண்டு பயந்ததை நினைத்து வெட்கிக் குனிந்து சிரித்தாள் மங்களம்.


குழந்தைகளுக்கும் கொண்டாட்டம். இருப்பினும் அந்த சத்தம் சற்று கடூரமாகவும் பயமுறுத்துவது போலவும் இருந்ததால் அதன் பேட்டரியை எடுத்துவிட்டு ஷோகேசில் வைத்துவிட்டான் வசந்த். குழந்தைகளுக்கு ஏமாற்றம். மங்களத்திற்கு பயம் போனது. வினயாவிற்கு காசு தண்டம் என்று வயிற்றெரிச்சலாக இருந்தது. மங்களத்திற்கு அது அச்சு அசல் நிஜப் பூனைபோல் செய்யப்பட்டிருப்பது பிடித்திருந்தது. அவ்வப்போது மடியில் எடுத்து வைத்துக் கொஞ்சினாள். வினயாவுந்தான்!


வசந்த் இதைத் தருவதாகச் சொல்லி குழந்தைகளை நன்கு படிக்க வைத்தான். மொத்தத்தில் அந்த வீட்டில் 'பூனாட்சி' நடந்தது எனலாம்.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%