மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி



நவிமும்பை, ஜன.


பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி. வாரியர்சை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.


5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 5-வது லீக்கில் உ.பி. வாரியர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் ஸ்மிர்தி மந்தனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.


இதையடுத்து முதலில் பேட் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 50 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது. இதில் கேப்டன் மெக் லானிங் (14 ரன்), லிட்ச்பீல்டு (20 ரன்) ஆகியோரும் அடங்குவர்.


இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு தீப்தி ஷர்மாவும், டியான்ட்ரா டோட்டினும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் இவர்களால் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. கடைசி வரை களத்தில் நின்றும் 150 ரன்களை கூட தொடவில்லை.


20 ஓவர்களில் உ.பி. வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுத்தது. தீப்தி ஷர்மா 45 ரன்களுடனும் (35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), டியான்ட்ரா டோட்டின் 40 ரன்னுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் ஸ்ரேயங்கா பட்டீல், நடினே டி கிளெர்க் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் லாரென் பெல் 4 ஓவர்களில் 16 ரன்னும், அருந்ததிரெட்டி 18 ரன்னும் விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டினர்.


ஹாரிஸ் 85 ரன்


அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணியில் கிரேஸ் ஹாரிசும், கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும் சூப்பரான தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக கிரேஸ் ஹாரிஸ் உ.பி. பந்து வீச்சை துவம்சம் செய்து வெற்றி வாய்ப்பை எளிதாக்கினார். டியான்ட்ரா டோட்டினின் ஒரே ஓவரில் 3 சிக்சர், 3 பவுண்டரி சாத்தினார். ஸ்கோர் 137-ஐ எட்டிய போது ஹாரிஸ் 85 ரன்களில் (40 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார்.


பெங்களூரு அணி 12.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மந்தனா 47 ரன்களுடனும் (32 பந்து, 9 பவுண்டரி), ரிச்சா கோஷ் 4 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஹாரிஸ் ஆட்டநாயகி விருதை பெற்றார். பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றியாகும். உ.பி. அணிக்கு 2-வது தோல்வியாகும்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%