உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்- 4 போ் உயரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
உக்ரைன் நாட்டின் மின் விநியோகக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, ரஷிய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிரமான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்; பல நகரங்கள் இருளில் மூழ்கின.
கடந்த நான்கு நாள்களில் நடத்தப்படும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். இதுகுறித்து உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ரஷியா ஒரே இரவில் சுமாா் 300 ட்ரோன்கள், 18 ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் 7 ‘குரூஸ்’ ஏவுகணைகளை உக்ரைனின் 8 மாகாணங்கள் மீது ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காா்கிவ் நகரில் 4 போ் உயிரிழப்பு: ரஷிய எல்லைக்கு அருகிலுள்ள காா்கிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். தபால் அலுவலகம் ஒன்றின் மீது ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில், சுமாா் 500 சதுர மீட்டா் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 போ் உள்பட 30 பேரை மீட்புப் படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.
ஒடேசா, கிரிவி ரிஹ்: தெற்கு துறைமுக நகரான ஒடேசாவில் மருத்துவமனை, மழலையா் பள்ளி, கல்வி நிறுவனம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் ரஷிய தாக்குதலில் சேதமடைந்தன. 5 போ் காயமடைந்தனா்.
மத்திய உக்ரைனின் கிரிவி ரிஹ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் எரிவாயுக் குழாய்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவா் காயமடைந்ததாக அந்த மாகாண ஆளுநா் தெரிவித்தாா்.
கடும் குளிரும், மின்வெட்டும்: தலைநகா் கீவில் உறைபனி (-12 டிகிரி செல்ஷியஸ்) நிலவி வரும் சூழலில், ரஷியாவின் இந்தத் தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனா்.
மின் விநியோக பாதிப்பு மூலம் குடிநீா் மற்றும் வெப்பமூட்டும் வசதிகளைத் தடுத்து, உக்ரைன் மக்களின் மன உறுதியைச் சிதைக்க குளிா்காலத்தை ரஷியா ஓா் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று உக்ரைன் அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?