ரூ. 525 கோடி நிதி மோசடி குற்றச்சாட்டு தேவநாதனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில், ரூ. 525 கோடி அள விற்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோர் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தேவநாதனைக் கைது செய்து சிறையிலும் அடைத்திருந்தனர். இடைக்கால ஜாமீனும் கடுமையான நிபந்தனைகளும் தொடர்ந்து இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களுக்குப் பிறகு, ஓராண்டுக்கு மேலாக வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் அக்டோபர் 30 வரை தேவநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். இதன்படி, 10 லட்சம் ரூபாய் ஜாமீன் உத்தரவாதம், இரண்டு நபர்களின் ஜாமீன் உத்தரவாதம் மற்றும் சொந்தப் பணமாக 100 கோடி ரூபாயை விசாரணை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும், ஒவ் வொரு திங்கட்கிழமையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது, வேறு எங்கும் செல்லக்கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. உச்சநீதிமன்றமும் மறுத்தது நீதிபதி ஜெயச்சந்திரன் செப்டம்பர் 15 அன்று பிறப்பித்த உத்தரவில், அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் 100 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அக்டோ பர் 31 அன்று தானாக முன்வந்து தமிழ்நாடு (நிதி நிறுவன) வைப்புத் தொகையாளர்கள் நலப் பாதுகாப்பு (TANPID) சட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக தேவநாதன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், உச்ச நீதி மன்றம் அக்டோபர் 27 அன்று அவ ரது மனுவை தள்ளுபடி செய்தது. இறுதி எச்சரிக்கையும் கைது உத்தரவும் அதன்பின் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைக்க தேவநாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நவம்பர் 13 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தமிழ்ச்செல்வி இந்த மனுவை தள்ளுபடி செய்தார். முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இரா. திருமூர்த்தி, தேவநாதன் யாதவ் 100 கோடி ரூபாயைச் செலுத்தவில்லை என்றும், சரணடையவில்லை என்றும், வைப்பீட்டாளர்களின் பணத்தை திருப்பி செலுத்த எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வில்லை; உச்சநீதிமன்றமும் அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது என்று வாதிட்டார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தையே மிரட்டும் விதமாக நடந்துகொள்ளும் தேவநாதனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் காவல்துறை அவரை கைது செய்யும் என தெரிவித்ததோடு, தேவநாதனை கைது செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே, ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதன், கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.