வடசென்னை கட்டுமான பணிகள்: அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக்.6–
கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மைய புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கு சேவை சாலையின் பணிகளையும் மற்றும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரை பணிகளையும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர்.
பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கேசேகர்பாபு ஆகியோர் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி, மேடவாக்கம் டேங்க் ரோடு, கீழ்ப்பாக்கத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொளத்தூர் -பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டர் நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையின் இருபுறமும் 2 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், கொளத்தூர் ஏரிக்கரையை வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெடுஞ்சாலை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தான கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்ற ஆணையை நாங்கள் வழங்குகிறோம். அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் பணி தாமதமாகும் போது, பாதுகாப்பு கருதி, பேரிகேட் போன்றவை அமைக்க வேண்டும். விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை வைக்கிறோம். பணிகளை நிறுத்த வேண்டும் என்று எந்த நிலையிலும் ஆணை பிறப்பிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் சுமார் 66,000 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் உள்ளன. இதுபோன்ற பெரிய துறையில் கால அவகாசம் பார்க்காமல், எப்போதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் சாலை பணிகளை மேற்கொள்கிறோம். மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி தேவையான உபகரணங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்கிறோம். மழைக்காலம் என்பதற்காக நாங்கள் பணிகளை நிறுத்துவதில்லை. பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
மத்திய கைலாஷ் மேம்பாலம்
மத்திய கைலாஷ் மேம்பாலம் குறித்தான கேள்விக்கு அமைச்சர் வேலு பதில் அளிக்கையில்,
மத்திய கைலாஷ் மேம்பாலப் பணிகள் அக்டோபருக்குள் முடியும் என நம்புகிறேன். அந்தப் பணிகளை கடந்த வாரம் நேரில் சென்று பார்வையிட்டேன். பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வேறுபாடு என்னவென்றால் – புறநகர் பகுதிகளில் பைபாஸ் சாலைகள் உள்ளதால், இரவும் பகலும் பணிகளை நடத்த முடிகிறது. ஆனால் சென்னையில், காவல்துறையின் அனுமதி தேவைப்படுகிறது. அதிகபட்சமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே பணிக்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நேரத்திற்குள் பாதாள சாக்கடை பணி, பாலம் கட்டும் பணி, பெரிய உபகரணங்கள், ஐ-பீம் போன்றவற்றை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. அந்த நேரக் கட்டுப்பாடுகள் காரணமாகவே பணிகளில் சற்று தாமதம் ஏற்படுகிறது என்றார்.
திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை தற்போது மிகுந்த நெரிசலை சந்தித்து வருகிறது. இதற்காக 14 கி.மீ நீளமுடைய புதிய மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் நீளமான மேம்பாலமாக இருக்கும். அந்த பணிக்கான ஒப்பந்தங்களும், டெண்டர்அறிவிப்புகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.
தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்அளிக்கையில்,
தற்போதைய ஒப்பந்த காலத்தின்படி, இந்தப் பாலம் 2026 நவம்பரில் முடிக்க வேண்டும். இருப்பினும், நாங்கள் அதை பொங்கலுக்குள் முடிக்கலாமா என்ற இலக்குடன் பணிகளை வேகமாக செய்து வருகின்றோம். இந்தப் பாலம் ரீ-இன்போர்ஸ்ட் கான்கிரீட் கொண்டு கட்டப்படுகிறது. மேல்பகுதியில் முழுக்க முழுக்க இரும்பு ஸ்ட்ரக்சர் அமைக்கப்படுகிறது.
இந்தியாவின் பல இடங்களில் (பரோடா, ஹைதராபாத், மும்பை, சத்தீஸ்கர், தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டில் உள்ள பெண்ணார் தொழிற்சாலையில்) இந்த இரும்பு பில்லர் மற்றும் ஐ பீம் ஸ்ட்ரக்சர்கள் தயாராகின்றன. அனைத்து இடங்களிலும் கட்டுமான தரம் சரியாக உள்ளதா என்பதை நாங்களே நேரில் சென்று ஆய்வு செய்கிறோம். அடுத்த வாரம் சத்தீஸ்கர் செல்ல உள்ளோம். குவாலிட்டி கன்ட்ரோல் என்ஜினியரை நியமித்து, ஒவ்வொரு இடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
இந்த ஆய்வுகளின்போது மேயர் ஆர்.பிரியா, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
---------