வந்தவாசி - வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலை தீபத் திருவிழா: சிறப்பு தொகுப்பு
வந்தவாசி மலை உச்சியில் உள்ள கோவில் வரலாறு பற்றி இங்கு பார்க்கலாம் ...!
வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் சுமார் 1,400 அடி உயரமுள்ள தவளகிரி மலை உள்ளது. இந்த
மலை மீது தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையார் கோயில்களும் அமைந்துள்ளன.
*தலவரலாறு:*
சிவபெருமான் தனது குமாரன் முருகனுக்காக ஜோதி ரூபத்தில் காட்சி நல்கிய திருத்தலம் வெண்குன்றம் என்று அழைக்கப்படும் தவளகிரி.
செவி வழிச் செய்தியாக பல்வேறு புராண வரலாறுகள் இத்தலத்துடன் சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுகிறது. சிவபெருமானின் ஆணைப்படி வியாச மகரிஷி உலக மக்கள் உய்த்துணரும் வண்ணம் வேதங்களின் கருத்துகளை மக்களிடம் பரப்பும் நோக்கத்துடன் பல்வேறு புண்ணிய தலங்களை தரிசித்தார். அப்போது தென்திசையில் வெண்ணிற மலையினைக் கண்டார். அங்கே லிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி நாள்தோறும் பூஜித்து வந்தார். வெண்ணிற மலையில் வியாச முனிவரால் பூஜிக்கப்பட்ட பெருமானுக்கு தவளகிரீசர் (தவளம் - வெண்மை) என்றும், அவரால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்திற்கு 'வியாச தீர்த்தம்' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. உயிர்கள் நீராடுவதன் மூலம் தனக்கு ஏற்படும் பாவங்கள் நீங்குவதற்காக சிவபெருமான் அருளாசிப்படி கங்காதேவி வெண்குன்றினை அடைந்தாள். தவளகிரீசப் பெருமானை பூஜித்தாள். தான் விரும்பிய தூய நிலையை அடைந்தாள்.
இந்திரன், தேவர்களுடன் வந்திருந்து தவளகிரி நாதனை தரிசித்து வணங்கியதாக வரலாறு கூறுகிறது. அவனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் 'இந்திர தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. தவளகிரிநாதரை வழிபட்டு தனது கூரிய வேலால் தீர்த்தம் ஒன்றினை உண்டாக்கி சிவபெருமானை பூஜித்து வந்தார் ஆறுமுகன். அவ்வேளையில் குன்றின் மீது சிவபெருமான் ஜோதிரூபமாய் தோன்றி அவ்விடத்தே லிங்க ரூபமானார் என்று சொல்லப்படுவதும் உண்டு. இன்றும் ஆறுமுகனுக்கு திருக்காட்சி நல்கிய பெருமான் அருணாச்சலேசர் எனும் திருப்பெயருடன் தனிச் சந்நிதி கொண்டு தவளகிரியில் விளங்குகிறார். ஆறுமுகனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் 'குமார தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது. பல்வேறு ரிஷிகளும், சித்த புருஷர்களும் தவளகிரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர்.
*கல்வெட்டுக் குறிப்புகள்:*
இரண்டு பழங்கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பல்லவ மன்னன் 3ஆம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் 8 ஆம் நூற்றாண்டின் பல்லவர்கள் காலத்தில் இந்தத் தலம் சிறப்பிடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. அதில் வெண்குன்றம் கிராமத்து சபை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒரு பக்கம் தெலுங்கு மொழியிலும் மறுபக்கம் சமஸ்கிருத மொழியிலும் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டிலிருந்து விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் இத்தலம் சிறப்பாக விளங்கியதையும் திருப்பணிகள் நடந்தேறியதையும் அறிய முடிகிறது.
*தீபத் திருவிழா:*
கார்த்திகை தீபத் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப் பெருமான் மலையடிவாரத்திற்கு எழுந்தருளுவார். பின்னர் மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீசப் பெருமானுக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் இதர மூர்த்திகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம் சுற்றுவட்டாரத்தில் 10 கி.மீ. தூரத்துக்குத் தெரியும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசித்து ஈசனின் அருளையும் அவருடைய புதல்வரின் அருளையும் பெறலாம்.
*சுரங்கப்பாதை:*
மலையின் ஒரு பகுதியில் இருந்து வந்தவாசி கோட்டைக்கும் செஞ்சி கோட்டைக்கும் சுரங்க பாதை இருந்ததாகவும் நாளடைவில் பாழடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது,
இந்த சுரங்கம் மன்னர்கள் காலத்தில் உருவாக்கபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

தொகுப்பு: பா.சீனிவாசன்,
வந்தவாசி.