வாழ்க்கை வாழ்வதற்கே..

வாழ்க்கை வாழ்வதற்கே..



வானலாவி வளர்ந்து நின்ற பனை மரங்களை அதிசயமாய் பார்த்தவாறு நடந்தான் நாயகன் பிரசாந்த். மனைவியைப் பார்த்து நறுக்கென்று நாலு கேள்வி கேட்க வந்து கொண்டிருக்கிறான்.


பூந்தோப்பு கிராமத்திற்கு பெரிதாக பஸ் வசதி கிடையாது. காலையில் இரண்டு முறை, மாலை ஆறுமணிக்கு மேல் இரண்டு முறை டவுன் பஸ் உள்ளே வரும்.  


இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. மதியம் அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டான். மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கொண்டிருக்கிறான்.


வாசலில் மார்கழி மாதம் அடுத்தநாள் போடும் கோலத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா.


பிரசாந்தைக் கண்டதும் வேகமாக எழுந்தவள் முகத்தில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன், "வாங்க வாங்க, என்னங்க இந்த வெயில்ல வந்துருக்கீங்க? உள்ள வாங்க" என்றழைத்து நாற்காலி எடுத்துப் போட்டு உட்காரச் சொன்னாள்.


தண்ணீர் கொண்டு தந்தாள். "கை கழுவிட்டு வாங்க, சாப்பிடுங்க" என்று ஒரு தட்டில் சாதமும் கொஞ்சம் சாம்பார் ஊற்றித் தந்தாள். தொட்டுக் கொள்ள வெந்தயத் துவையல் வைத்தாள்.


நிறைந்த பசியில் வந்தவன் அள்ளிச் சாப்பிட்டான். தட்டை அலம்பி வைத்தவள் "என்ன விசயம்ங்க? நீங்களே வந்துருக்கீங்க? அத்தை சொன்னாங்க தானே?" கேட்டவள் ஆவலாய் முகத்தை வைத்துக் கொண்டு இவன் பதிலுக்குக் காத்திருந்தாள்.


சிறிது நேரம் அமைதி காத்தான். இவள் எதார்த்தமாக பேசுகிறாள். கவிதாவே மீண்டும் பேச்சைத் துவங்கினாள்.


"இல்லிங்க, ஒங்ககிட்ட சொல்லிட்டு வரலாம்னு நெனச்சேன். அத்தைதான் உடனே கெளம்புன்னு சொல்லிட்டாங்க. நானும் வந்துட்டேங்க" என்று நிறுத்தினாள்.


பிரசாந்திற்கு தலை சுற்றியது. இவள் இன்னமும் வந்த காரணத்தைச் சொல்லவில்லை. புரியாத புதிராய் தவித்தான்.


"அம்மா போனவாரம் வண்டில போகும்போது விழுந்துட்டாங்க. அடி கொஞ்சம் பலமா இருந்துச்சுன்னு பக்கத்து வீட்டு மணியண்ணேன் வந்து சொல்லுச்சு. அத்தை ஒடனே அனுப்பிட்டாங்க. நேத்துத்தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். கையில பலமான அடிங்க. மாவுக்கட்டுப் போட்ருக்கோம். பாவங்க" அப்பாவியாய் சொல்லி முடித்தாள்.


"பிரசாந்து, இனிமே அவ வழிக்கு வரமாட்டாடா. எதையும் கேட்டு செய்யினு சொல்றேன்னு ஒரே கோவம் அவளுக்கு. என் இஷ்டத்துக்கு எதுவும் பண்ணமுடீலன்னா இங்க என்ன வேலைன்னு கேக்கறா. நா எங்க வீட்டுக்குப் போறேன். ஒங்க மகன நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிட்டு கெளம்பிப் போயிட்டாடா" இது அம்மா சொன்னது.


பிரசாந்துக்கு வியர்த்தது. கொஞ்சம் தண்ணிக் குடித்தான். அவளை உட்காரச் சொன்னான்.


தூங்கி எழுந்த மாமியாரைப் பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் சொன்னான்.


கவிதாவிடம் நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன்னான். அவள் என்ன நினைப்பாளோ என்று பார்த்தான்.


அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. இவனுக்குப் பொறுமை போனது.


"விடுங்க, அவங்க சின்னப்புள்ளைலேந்து ஒத்தை ஆளா வளத்துருக்காங்க. நீங்க நா சொல்றபடி கேட்டிங்கன்னா, அவங்களவிட்டுப் போயிடுவீங்கன்னு நெனைக்கறாங்க பாவம். அதெல்லாம் பாத்துக்கலாம்.


அண்ணன் நைட்டுக்கு வந்ததும் சொல்லிட்டுக் கெளம்பலாம். அம்மாவை எதுத்த வீட்டு அக்காப் பாத்துப்பாங்க" என்றாள்.


அடிப்படையில் வெள்ளந்தியாய் இருக்கும் கவிதாவை மிகவும் பிடிக்கும்.

அம்மாவிடம் கூட சொல்லாமல் வந்துவிட்டான்.


"இல்ல கவி, நீ இன்னும் ஒரு வாரம் கழிச்சுக் கூட வா. நா பார்த்துக்கறேன்" என்றான்.


பக்கத்து வீட்டுப் பையனுடன் சைக்கிளில் மெயின்ரோடு சென்றான்.


அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி எதார்த்தத்தைப் புரியவைத்தான்.


"ஒன்ன அன்பா பாத்துக்க இப்ப ரெண்டு பேர் இருக்கோம்மா, கவலைப் படாத" என்று முடித்தான்.


வாழ்க்கை வாழத்தானே? மனதை நம் வசம் வைத்திருக்க வேண்டும்.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%