ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு



தீபாவளிக்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (42 வயது). இவர் நேற்று மாலை ஒரத்தநாடு கடைத்தெருவில் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் ஒரு துரித உணவகத்தில் உணவு பொட்டலங்களை பார்சல் வாங்கிய தமிழ்ச்செல்வி ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார்.


ஒரத்தநாடு பி.எட். கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்தனர். இதில் நிலைதடுமாறி தமிழ்ச்செல்வி கீழே விழுந்தார். இந்த நேரத்தில் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் பைக்கில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்றுவிட்டனர். ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த தமிழ்ச்செல்வி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%