காலை ஏழரை மணி.
அவசர அவசரமாய்க் கிளம்பி கொண்டிருந்தான் சிவா.
'டேய் சிவா... ராத்திரியெல்லாம் நான் தூங்கவே இல்லைடா!.. நெஞ்சு அடைக்குதுடா... மூச்சே விட முடியலடா" அவன் தாய் கலா சிரமப்பட்டுச் சொல்ல,
"சரி அதுக்கு என்ன இப்ப?"
"கொஞ்சம் என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போடா" பெரிது பெரிதாய் மூச்சு விட்டபடி சொன்னாள் கலா.
'அய்யய்யோ... சான்ஸே இல்ல... நான் இப்ப எங்க கிளம்பிட்டிருக்கேன் தெரியுமா?... என்னோட தலைவர் "கலக்கல் ஸ்டார்" கோபிகாந்த்!... படம் இன்னைக்கு ரிலீஸ்!... காலை 9 மணிக்கு முதல் ஷோ!... ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கேன்!" பாக்கெட்டிலிருந்து டிக்கெட் எடுத்து ஆட்டிக் காட்டினான்.
"டேய்... அந்த படத்துக்கு நாளைக்கு போய்க்கடா... இன்னைக்கு என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போடா" கெஞ்சினாள் கலா.
"அது சரி... தலைவர் படத்தை "எஃப்.டி. எஃப்.எஸ்" பார்க்கிறதுதான் கெத்து"
அவன் சொல்வது புரியாமல் தாய் விழிக்க, "அப்படின்னா என்ன?ன்னு தெரியலையா?... ஃபர்ஸ்ட் டே... ஃபர்ஸ்ட் ஷோ!" விளக்கினான் சிவா.
"டேய் என்னால முடியலடா" தாய் பேசப் பேச அந்தப் பேச்சை காதில் கூட வாங்கிக் கொள்ளாதவனாய் வாசலைத் தாண்டி ஓடினான் சிவா.
மாலை 4 மணி வாக்கில் மிகவும் களைத்துப் போய் வீடு திரும்பிய சிவா, தன் வீட்டின் முன் கும்பலாய் எல்லோரும் குவிந்திருப்பதை பார்த்து "திக்...திக்" என்று அதிரும் நெஞ்சுடன் வேகமாக வந்தான். அவனைத் தடுத்த அவன் தாய்மாமன் சுந்தரம், "டேய் சிவா எங்கடா போயிருந்தே இத்தனை நேரம்?" கோபமாய் கேட்டார்.
"அது...வந்து" பதில் சொல்ல முடியாமல் தயங்கினான் சிவா.
சற்று தள்ளி நின்றிருந்த பக்கத்து வீட்டு காலேஜ் புரஃபசர் சிவாவை பார்த்து விட்டு அங்கிருந்து வேக வேகமாய் வந்து 'என்னப்பா... கிட்டத்தட்ட 20 தடவைக்கபண்ணினேன்... உனக்கு போன் பண்ணினேன் நீ எடுக்கவே இல்லை.. ஏம்பா?" கேட்டார்.
தான் கோபிகாந்த் படத்தை "எஃப்.டி. எஃப்.எஸ்" பார்த்துக் கொண்டிருந்ததையும்... தியேட்டரில் ரசிகர்களின் அதீதக் கூச்சலால் தன் மொபைல் ஒலித்ததை தன்னால் கேட்க முடியாமல் போனதையும், அவனால் சொல்ல முடியவில்லை.
"சொல்லுப்பா.. ஏன் போனை எடுக்கலை?" புரஃபசர் சற்றுக் கோபமாய்க் கேட்க.
"அது வந்து... தலைவர் படத்தை எஃப்.டி.எஃப்.எஸ்..." என்று அவன் சொல்ல ஆரம்பிக்க, இடையில் புகுந்த புரஃபசர்
"ஓ... ஒரு நடிகனோட படத்தை எஃப்.டி. எஃப்.எஸ்.. பார்க்க போனதன் விளைவு என்ன தெரியுமா உனக்கு?" கேட்டார் புரஃபசர்.
"எ...ன்..ன?" நடுங்கும் குரலில் கேட்டான் சிவா.
"உன் தாயோட "எல்.டி.எல்.எஸ்"ஸை உன்னால பார்க்க முடியாமல் போயிடுச்சு"
சிவா வீட்டிற்குள் திரும்பி பார்த்து விட்டு, "சார் நீங்க என்ன சொல்றீங்க?.. எல்.டி.எல்.எஸ்.ன்னா என்ன?"கேட்டான்.
"உங்க அம்மாவோட "லாஸ்ட் டே.. லாஸ்ட் ஸ்மைல்"லை உன்னால் பார்க்க முடியாமல் போயிடுச்சு!.. ஆமா... உங்க அம்மா இறந்துட்டாங்க!"
புரஃபசர் சொல்லி முடிக்கும் முன், "அ...ம்...மா!"என்று கத்தியபடி வீட்டுக்குள் ஓடினான் சிவா
(முற்றும்)
முகில் தினகரன்,
கோயமுத்தூர்.