2024-–25 நிதியாண்டில் கடன்சுமை குறைந்து வங்கிகளின் செயல்பாடு அதிகரிப்பு

2024-–25 நிதியாண்டில் கடன்சுமை குறைந்து வங்கிகளின் செயல்பாடு அதிகரிப்பு


மத்திய ரிசர்வ் வங்கி தகவல்

சென்னை, 


2024–-25 நிதியாண்டில் கடன்சுமை குறைந்து நாட்டின் வணிக வங்கிகளின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.


வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படுகின்றன. மக்களிடமிருந்து சேமிப்புகளை திரட்டி, அவற்றை தொழில்கள், விவசாயம், வணிகம் மற்றும் தனிநபர்களுக்கு கடனாக வழங்குவதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நிதி ஓட்டத்தை வங்கிகள் உறுதி செய்கின்றன.


முதலீடுகளை ஊக்குவிப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவது, தொழில் உற்பத்தியை மேம்படுத்துவது, நிதி நிலைத்தன்மையை பாதுகாப்பது, அரசின் நிதி மற்றும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகள் செயல்பட வங்கிகள் பெரும்பங்காற்றி வருகின்றன.


வங்கித் துறை வலுவாக இருந்தால், நாட்டின் பொருளாதாரமும் வலுவாக இருக்கும்.


90 நாட்களுக்கு மேல் வட்டி அல்லது அசல் தொகை செலுத்தப்படாமல் இருக்கும் கடன்களில் மொத்த மதிப்பே மொத்த செயல்படாத கடன்கள் எனப்படும். வங்கிகளின் மொத்த செயல்படாத கடன்கள் விகிதம் குறைந்தால் கடன் வசூல் மேம்பட்டு வங்கியின் சொத்து தரம் உயர்ந்துள்ளதாக அர்த்தம். நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதை இது உறுதி செய்யும். 2024-–25 நிதியாண்டில் வங்கிகளின் மொத்த செயல்படாத கடன்கள் குறைந்து செயல்பாடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இந்தாண்டு மார்ச்சுடன் முடிவடைந்த 2024-–25 நிதியாண்டில் மொத்த செயல்படாத கடன்கள் 2.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பல ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாகும். “இந்திய வங்கித் துறையின் நிலை மற்றும் முன்னேற்றம் 2024–-25” என்ற அறிக்கையில், 2024–-25 காலகட்டத்தில் வங்கித் துறை வலுவான சமநிலைப் பட்டியல், தொடர்ச்சியான லாபம் மற்றும் மேம்பட்ட சொத்துத் தரம் ஆகியவற்றுடன் திடமாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளது.


வங்கி கடன் மற்றும் வைப்பு வளர்ச்சி இரட்டை இலக்கங்களில் தொடர்ந்தாலும், வளர்ச்சி வேகம் சற்றே மந்தமானது. மூலதனம் மற்றும் திரவத்தன்மை பாதுகாப்பு அளவுகள் அதிகமாக இருந்தன. 2024–-25ல் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் நிகர லாபம் 14.8 சதவீதம் உயர்ந்து ரூ.4.01 லட்சம் கோடி ஆகியுள்ளது. 2023-–24-ல் வங்கிகளின் நிகர லாபம் ரூ.3.5 லட்சம் கோடியாகும்.


வங்கிகளின் லாபத்தை கணிக்கும் சொத்து மீதான வருமானம் 1.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குதாரர் முதலீடு மீதான வருமானம் 13.5 சதவீதம் ஆகும். அபாய எடையிட்ட சொத்துகளுக்கு எதிரான மூலதன விகிதம் மார்ச் 2025 முடிவில் 17.4 சதவீதமாக இருந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%