tamilnadu epaper

அகிம்சை நாடு

அகிம்சை நாடு


        ஆறாம் வகுப்பு படிக்கும் தமிழரசனுக்கு படிப்பில் மட்டுமல்ல, தான் படித்து முடித்ததும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தான்.

     இராணுவத்தில் சேருவது தொடர்பான

விபரத்தை அறிந்து கொள்வதற்காக தனது வீட்டின் அருகிலிருக்கும் அரசு நூலகத்திற்கு சென்று அங்குள்ள புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படிப்பதில் கவனம் செலுத்தி வந்தான்.

இதற்கெல்லாம் காரணம் இவனது தாத்தா கண்ணையன் இராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வுப் பெற்றவர். ஓய்வூதியம் பெற்று வந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக தனது 90 வயதில் இறந்து போனார்.

தாத்தாவின் இறுதி சடங்கின்போது, கலெக்டர் தலைமையில் அரசு மரியாதையுடன் தாத்தாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், தமிழரசன் மனதில் தானும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற ஆசை மேலும் உருவாகிவிட்டது.

கண்ணையன் உயிரோடு இருந்த காலத்தில், பேரன் தமிழரசனுக்கு, தான் இராணுவத்தில் பணிபுரிந்த போது நடந்த சம்பவங்களையும், இரண்டாம் உலகப் போரின் போது நமது இராணுவம் செயல்பட்ட நிகழ்வுகளையும் பெருமையோடு சொல்வதுண்டு.

தாத்தாவிடம் அடிக்கடி இராணுவம் தொடர்பான செயல்பாடுகளை கேட்ட நாள்முதல் தானும் இராணுவத்தில் சேரவேண்டும் என்று தனது அம்மாவிடமும், அம்மாவிடமும் சொல்லிக் கொண்டே இருப்பான்.

தமிழரசனின் தந்தை அதிகம் படிக்காத க் காரணத்தால் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு தனது வீட்டு வாசலிலேயே தையல்கடை வைத்துள்ளார்.அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டு, தனது ஒரே மகன் தமிழரசனையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு தான் படிப்பறிவு இல்லாமல் போய்விட்டது.

நீயாவது நன்கு படித்து அரசாங்க உத்தியோகத்திற்கு போகவேண்டும் என்று அடிக்கடி தமிழரசனிடம் சொல்லி வருவார்.

தமிழரசனின் தாயாரும் நீ நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.

சமீப காலமாக பாகிஸ்தான் இந்தியா போர் நடப்பதை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்ட தமிழரசன், நமது நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தான்.

பள்ளி கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போர் பற்றிய செய்திகளை ஆர்வமாக கவனித்து வந்தான்.

தனது பள்ளித் தோழர்களிடமும் போர் பற்றிய செய்திகளை பேசி வந்தான்.ஆனால் அவர்கள் கைபேசியிலேயே முழ்கி கிடந்தார்கள்.

வீட்டைப் பற்றியோ,‌நாட்டைப் பற்றியோ கவலை ப்பட்டதாகத் தெரியவில்லை.

அன்று இவன் வழக்கமாக செல்லும் நூலகத்திற்குள் நுழைந்ததுமே இவனது வகுப்பு ஆசிரியர் ஆனந்தன் செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தார்.

தமிழரசனைக் கண்டதும், உன்னை நூலகத்தில் கண்டது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது; என்றார்.

சார்... தினசரி நூலகத்திற்கு நான் வந்து போகிறேன் என்றதும், ஆசிரியர் தமிழரசனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ஆசிரியர் ஆனந்தனிடம் தமிழரசன், பள்ளி நேரத்தில் அறிவுபூர்வமான கேள்விகளைக் கேட்பதும், பாடத்தில் அடிக்கடி சந்தேகங்கள் கேட்பதும் வழக்கமாக இருந்ததால் , நூலகத்திற்கு வந்துள்ள ஆசிரியரிடம் எனக்கு சந்தேகம் ஒன்று உள்ளது.அதை நீங்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும் என்றான்.

ஆசிரியரும் உன் சந்தேகம் என்ன என்றதும், நம் நாட்டிற்கு அகிம்சை வழியில் தானே சுதந்திரம் பெற்றோம்! ‌அப்படி இருக்கும் போது, எதற்காக நாம் பாகிஸ்தானுடன் சண்டைக்கு போகவேண்டும்?

தமிழரசா! நீ தவறாக புரிந்து கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்.‌நீ மட்டுமல்ல; சரியான புரிதல் இல்லாமல் நம்மில் பலர் இப்படித்தான் தாய் நாட்டின் மீதே சந்தேகப்பட்டு க் கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தான் மீது நமது நாடு ஒன்றும் தானாகப் போய் போர்த் கொடுக்கவில்லை.

பாகிஸ்தான் தீவிர வாதிகளால் பல ஆண்டுகளாக நாம்தான் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளோம்.

நமது நாட்டின் எல்லைப்பகுதியில் அடிக்கடி நடக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு

காரணமாக உள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பதிலடியைத்தான் நமது இராணுவம் கொடுத்து கொண்டிருக்கிறது.

நமது இராணுவத்தால் பாகிஸ்தான் மக்களுக்கு எவ்விதத்திலும், எப்போதும் பாதிப்பு இல்லை.

மக்களை தாக்குவதல்ல நமது இராணுவத்தின் குறிக்கோள்.

தீவிரவாதத்தை வேரோடு அழிப்பதே நமது இராணுவத்தின் குறிக்கோள் என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் 

22-ந்தேதி காஷ்மீரிலுள்ள பகல்ஹாம் சுற்றுலாப் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்திருந்த நமது மக்கள் 26 பேரை ஈவு இரக்கமின்றி பாகிஸ்தான் தீவிர வாதிகள் சுட்டுக் கொன்றதை நீ செய்தித்தாள்களில் படித்திருப்பாய் என்று நினைக்கிறேன்.

அந்த தீவிரவாதிகளின் தீவிர வாத நடவடிக்கையை ஒடுக்குவதற்குதான் நமது இராணுவம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மற்றபடி பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கும் இந்தியாவுக்கும் பகையுணர்வு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகநாடுகளுக்கே 

அகிம்சையை போதித்து வரும் நாடாக "நமது இந்தியா"‌இருப்பதை நீ தெரிந்து கொண்டாலே, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கவில்லை என்பதை நீயே தெரிந்து கொள்வாய்!

என்று ஆசிரியர் சொன்னதைக் கேட்டு 

சார்.... இப்போது எனக்கு தெளிவாக

புரிந்து விட்டது என்றான் தமிழரசன்.


தமிழ்ச் செம்மல்,

நன்னிலம் இளங்கோவன்.