tamilnadu epaper

வேர்களும் விழுதுகளும் ...

வேர்களும் விழுதுகளும் ...


ஆசிரியர் : திருமதி வசந்தா கோவிந்தராஜன் 

பதிப்பகம் : புஸ்தகா

விலை : ரூ 190


கதாசிரியை வசந்தா கோவிந்தராஜன் அவர்களின் வேர்களும் விழுதுகளும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு

சிறுகதைகள் ஒவ்வொன்றும் நல்முத்துக்கள் ...வெவ்வேறு கதைக்களங்களில்.. வெவ்வேறு உணர்வுகளை.. வெவ்வேறு கதாபாத்திரங்கள்  வடிவில் பிரதிபலிப்பதைப் பார்க்கும்போது ஆசிரியரின் திறமை அழகாக வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் உள்ள கதை எல்லாமே வெவ்வேறு போட்டிகளில் பரிசு வென்றவை.  


" நான் ராமன் தான்.." லேசான ஒரு மயிலிறகாய் ..கல்யாணமானவரின் சிறு சலனத்தை நகைச்சுவை இழையோட விவரிக்கிறது .. 


"அவமானம்" இம் முழு தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கதை எனலாம். பேத்தி, மகள், பாட்டி என மூன்று தலைமுறையை சுற்றி வருகிறது இக்கதை என்றாலும், வேதாவின் வாழ்க்கையில் அவள் பட்ட அவமானத்தை அழுத்தமாக, மனதை நெகிழ வைக்கும் வண்ணம் தந்திருக்கிறார் கதாசிரியர். மனதை மிகவும் பாதித்த கதை. 


"தாய் மாமன் "  சாதாரணமாய் ஆரம்பித்து அழுத்தமான முடிவோடு முடிகிறது. "யௌவன திரவம்" படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம். "சலுகை துறந்தவர்" சமுதாயத்திற்கு நல்ல படிப்பினை. " புரியாத புதிர்" சற்று வித்தியாசமான கதை.. இரு பெண்மணிகளின் ஆழமான நட்பை அன்பை விளக்கும் அழகான கதை.. தன்மகள் நடத்தையால் தன் சிநேகிதியின் நிம்மதி போய் விடக்கூடாது என்ற இந்த தோழியின் முடிவு அருமை. 


" சுனாமி புதல்வன் " சுனாமியால் தாய் தந்தையை இழந்த சிறுவனை ஆதரிக்கும் அந்த தந்தை மகன் உறவு.. தாயின் இறுதி அரவணைப்பு மிகவும் அருமை. 


நாடக மேடை , ஆசான் , காலச்சக்கரம் அனைத்து கதைகளும் அருமை. "தலைமுறை' கதை உணர்வுகளால் நம்மை உலுக்குகிறது . 


இவருடைய சிறுகதைகள் அத்தனையும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் மனதை பாதிக்கிறது. அழகான இயல்பான நடையில் மனதைக் கவர்கிறது. இவற்றில் பல கதைகள் பரிசு பெற்றவை ..பரிசுக்கு முற்றிலும் தகுதியானவை என்பது படிக்கும் போதே தெரிகிறது. 


அடுத்து இவருடைய குறுநாவல் "வேர்களும் விழுதுகளும் " மிகவும் அருமை ..மூன்று காலகட்டமாக நடக்கும்

இக்கதை மூன்று தலைமுறைகளை பற்றியது. ஒவ்வொரு தலைமுறையையும் அழகாக அதற்குரிய இயல்பான மொழிநடையில் விவரித்திருக்கிறார். நுணுக்கமான ஒவ்வொரு விபரங்களும் அதற்கு எழிலூட்டுகிறது.

அந்தக் காலத்து சுப்புணி திருமணம்.. அப்பளம் இடுவதிலிருந்து ஆரம்பித்து அழகாய் நகர்கிறது. அடுத்த அட்வகேட் சுப்பிரமணியம்.. அவர் மகள்  காதல் திருமணத்திற்கு தரும் ஆதரவு.. புரிந்து கொள்ளும் தந்தையாய். 


மூன்றாம் காலகட்டம் அமெரிக்காவில் இன்றைய கலாச்சாரத்தில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. மிகவும் ருசிகரமாக அதைச் சொல்லி இருக்கும் கதாசிரியர் நாம் எதிர்பாராத ஒரு திருப்புமுனையுடன் கதையை முடிக்கிறார். 


மொத்தத்தில் இக்கதை தொகுப்பு மிக பிரமிப்பை கொடுத்தது. கதாசிரியரின் அழகிய எழுத்து நடையாகட்டும், கற்பனை வளமாகட்டும், ஒவ்வொறு கதையையும் வித்தியாசமாக கொடுத்த பாங்காகட்டும், எல்லாமே அசர வைக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும். மேலும் பல வெற்றிகளையும், விருதுகளையும் குவிக்க வேண்டும். அதற்கு என் உளப்பூர்வமான வாழ்த்துகள். புஸ்தகாவில் இப் புத்தகம் இ- புத்தகமாகவும், அச்சு புத்தகமாகவும் கிடைக்கிறது.கிண்டில் தளத்திலும் நீங்கள் படித்து மகிழலாம்.

படித்து மகிழவும், பரிசளிக்கவும் உகந்த புத்தகம். 


தி.வள்ளி

திருநெல்வேலி.