இப்புத்தகத்தை குறித்து க.அம்சப்ரியா
வாழ்வின் பாதையாகும் கதைகள்
ஒவ்வொருவரின் வாழ்விலும் ஓராயிரம் சுகதுக்கங்கள், பிறருக்கு அறியத் தருவதன் வழியாக வாழ்கின்ற வாழ்வைப் புரியவைத்திட இயலும்.
மாற்றங்களின் வழியே ஏற்படும் அகச்சிக்கல்களை உளவியல் ரீதியாக பதிவு செய்ய சிறுகதைகள் தக்க துணைபுரிகின்றன.
இதுவரை எழுதப்படாத கதைகள் என்பவை நாம் அறிந்திடாத பிறர் வாழ்க்கைதான்.
அதைத் தெரிந்து கொள்வதன் வழியே மனச்சாட்சியுள்ள வாழ்க்கைக்கு அவரவர் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்.
அன்றாடம் நாம் எளிதில் கடந்து போகிற மனிதர்களிடம் ஏதேனும் ஒரு துயரம்,மகிழ்ச்சி, கொண்டாட்ட மனநிலை, வாழ்வை வெறுக்கிற சூழலின் அடர்எண்ணம் இருக்கக்கூடும்.
இவற்றை உணர்கிற நுட்பமனநிலை வாய்த்தால் நமக்குள் இருக்கிற சிறுகதை படைப்பாளரைக் கண்டறிந்துவிட இயலும்.
அப்படியான கண்டறிதல்களைச் சிறந்த கதைகளாக்குகிறார் கவிமுகில் சுரேஷ்.
ஒரு நிகழ்வு ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான அனுபவங்களைத் தரக்கூடியது. அதனால்தான் இத்தனை கதைகள் எழுதப்பட்டும் இன்னும் எழுதவென கதை நிகழ்வுகள் காத்திருக்கின்றன.
இந்தச் சூழலில் கவிமுகில் சுரேஷ் அவர்களின் "அம்மாவின் வரவு" சிறுகதை புதிய வரவாகியுள்ளது.
"அம்மாவின் வரவு " என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது.
வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது.
நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது.
" மேஸ்திரி' என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை.
இப்படி கதைகள் தோறும் பயணிக்கிற போது கதையாசிரியரின் உலகம் விரிந்து விரிந்து எல்லையற்றதாகிறது.
நிறைவேறாத ஆசைகள், உண்மையும், பொய்யும் தன்னைத்தானே ஆய்வுக்குட்படுத்திக் கொள்கிற குணம். உண்மையான காதல் உணர்த்தும் உளவியல், சமூகத்திற்கு எது தேவை, எது தேவையில்லையென்கிற பக்குவம் என கதைகள் பரந்த தளத்தில் விரிந்துள்ளது.
நேர்மையோடு வாழ்கிறவர்களை எப்போதும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றே முத்திரை குத்துகிறவர்களும் அந்த உழைப்பைப் புரிந்து கொள்கிற நம்பிக்கையென கதைகள் வாழ்வியலின் பக்கங்களை அடையாளப்படுத்துகிறது.
பல்வேறு தேர்வுகள் இன்றைய மாணவர்களின் மனநிலையை எவ்வாறு சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சின்னஞ் சிறுகதையும் தொகுப்பில் உண்டு.
இக்கதைகளில் சமூகம் சார்ந்த கோபங்கள், தனிமனிதத் துயரங்களென யாவும் உண்டு.
இக்கதைகளை வாசிக்கிற வேளையில் நமக்குள் இச்சமூகம் குறித்தான சில வினாக்கள் எழுவது உறுதி.
க.அம்சப்ரியா தலைவர் பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இப்புத்தகத்தின் விலை ரூ:100
கொரியர்:40
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
புத்தகம் தேவைப்படுவோர் அணுகவும்