மயிலாடுதுறை:
குத்தாலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்துக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள், வர்த்தகர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மன்மத ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள், அடிமனைகள் உள்ளன. இந்நிலையில் கோயில் இடத்தில் இயங்கி வரும் தனியார் பேக்கரி ஒன்றின் இடம் தொடர்பாக ஹிந்து சமய அறநிலை துறைக்கும், பேக்கரி உரிமையாளருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் வாடகை நிலுவை இருப்பதாக கூறி ஹிந்து சமய அறநிலைத் துறை துணை ஆணையர் ராணி தலைமையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிரச்சனைக்குரிய கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தோர், இந்த பிரச்சினை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணையில் இருக்கும் நிலையில், எப்படி சீல் வைக்கலாம் என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வணிகர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தோர் பேக்கரி உரிமையாளருக்கு ஆதரவாக அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியே குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
......
காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: வெளியான பரபரப்பு வீடியோ
புல்வாமா: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இன்று அதிகாலையில் ஜம்மு - காஷ்மீரின் அவந்திபோராவில் உள்ள டிராலின் நாடர் பகுதியில் இந்திய ராணுவம், ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின. இந்த நடவடிக்கையில் மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், பயங்கரவாதிகளில் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் ஒரு கான்கிரீட் தூணின் பின்னால் பதுங்கியிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொலைவில் இருந்து படம்பிடிக்கப்பட்ட மற்றொரு வீடியோவில், பயங்கரவாதிகள் உடைந்த கொட்டகைக்குள் பதுங்கியிருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த 48 மணி நேரத்தில் காஷ்மீரில் நடந்த இரண்டாவது மோதலாகும். இந்த மோதல் முதலில் குல்காமில் தொடங்கி பின்னர் ஷோபியனில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் தொடர்ந்து வருகிறது. இதில் நான்காவது பயங்கரவாதி இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.