புதுடெல்லி:
“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு, வர்த்தக ரீதியாக தான் கொடுத்த அழுத்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றதா? ட்ரம்ப் கூறியதற்கு பிரதமர் மோடி ஏன் விளக்கம் தரவில்லை? - இதுபோன்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பி வருகிறது.
அதேநேரத்தில், ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொலைபேசியில் பேசியதே காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறையும் ராணுவமும் கூறியதற்கு ஆதரவாக சசி தரூர் கருத்துகளை முன்வைத்தார். ட்ரம்ப் உரிமை கோருவதற்கும் கண்டனம் தெரிவித்தார். இதன்மூலம், அவர் 'லட்சுமண ரேகை'யை மீறியதாக காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
“நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி, மக்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர், ஆனால் இந்த முறை, சசி தரூர் லட்சுமண ரேகையை மீறிவிட்டார்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டிருந்தது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷும் ஓர் ஊடக சந்திப்பின்போது தரூரின் கருத்துகள் குறித்து, "அது அவரது கருத்து. சசி தரூர் பேசும்போது, அது அவரது கருத்து, அது கட்சியின் நிலைப்பாடு அல்ல" என தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், "மோதல்கள் நிறைந்த இந்த நேரத்தில், நான் ஓர் இந்தியனாகப் பேசினேன். வேறு யாருக்காகவும் பேசுவது போல் நான் ஒருபோதும் செயல்படவில்லை. நான் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல. நான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அல்ல. நான் என்ன சொன்னாலும், நீங்கள் அதை ஒப்புக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம், தனிப்பட்ட முறையில் என் மீது பழி சுமத்தலாம், அது பரவாயில்லை.
நான் எனது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறினேன். தேசியக் கொடியுடன் அணிவகுப்பது, குறிப்பாக சர்வதேச அளவில் நாம் அணிவகுத்துச் செல்வது உண்மையில் தேசிய உரையாடலுக்கு ஒரு பங்களிப்பாகும். குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில், நமது கருத்துகள் போதுமான அளவு கேட்கப்படாத நிலையில் இது மிகவும் முக்கியம்” என தெரிவித்தார்.
அவரது கருத்துகளால் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏமாற்றமடைந்ததாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோது, "எனது கருத்தை நிராகரிக்க மக்கள் முழு சுதந்திரம் கொண்டுள்ளனர். கட்சியிடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை; நான் பார்ப்பது ஊடக அறிக்கைகள் மட்டுமே" என்று சசி தரூர் தெரிவித்தார்.