tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியே பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியே   பாடல்

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் கொண்டதல்ல என்கை

 

நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்

 

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ

 

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே

 

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் = நான் தெய்வ சிந்தனையில் இருந்து உன்னை வழிபட்டாலும், மன்னன் காரணமாக என்னை தடுத்து ஆட்கொண்டாய்

 

கொண்டதல்ல என்கை நன்றே உனக்கு? = அப்படி என்னை அடிமையாகக் கொண்டுவிட்டு பின்னர் உன் உடைமையாக என்னை இல்லை என்று சொல்வது உனக்கு ஏற்புடைத்தாகுமோ?

 

இனி நான் என் செயினும் = இனிமேல் நான் என்ன செய்தாலும்

 

நடுக்கடலுள் சென்றே விழினும் = அறிவற்று நடுக்கடலுள் சென்று விழுந்தாலும்

 

கரையேற்றுகை நின் திருவுளமோ = என்னைக் காத்துக் கரையேற்றுவது உன் திருவுள பாங்குதானே?!

 

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே = ஒன்றாகவும், பல நாமங்களுடன் பல சொரூபமாகவும், அருவமாகவும், உருவமாகவும் இருக்கக்கூடிய அன்னை உமையவளே!

 

என்று என்னை நீ தடுத்து ஆட்கொண்டாயோ அன்று முதல் நான் உனது உடைமையாகி விடுகிறேன். உடைமையை காக்க வேண்டியது உடையவளின் பொறுப்பு. இனி நான் என்ன செய்தாலும், நடுக்கடலில் சென்று விழுந்தாலும் என்னை காப்பாற்றாமல் இருப்பது உன் புகழுக்கும், பெருமைக்கும் நல்லதா? ஒன்றாகவும், பல நாமங்களாகவும், பல ரூபங்களாகவும், அருவமாகவும் உருவமாகவும் இந்த அகிலத்தில் அருளக்கூடிய என் உமையவளே!

 

 

தனது தவயோக முறைகளால் இறைவனை வேண்டி பக்தனை இறைவன் ஆட்கொள்வது ஒரு முறை.  

 

அவ்வாறாக இல்லாமல் இறைவன் தானாகவே வந்து தனது அடியவரை ஆட்கொள்வதை தடுத்து ஆட்கொள்ளுதல் என சொல்வார்கள்.

 

சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் போன்றோரை தானே வந்து இறைவன் ஆட்கொண்டுள்ளார். 

திருவெம்பாவையில் "தானே வந்து எம்மை தலையளித்து ஆட்கொண்டருளும்...." என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

 

குழந்தை தன் தாயை என்ன சொல்லி அழைத்தாலும் அது அன்னைக்கு அந்த வார்த்தை அழகுதான். இங்கு பட்டர் அன்னையை 'என் உமையவளே...' என்று அழைப்பது அந்த அன்னைக்கு மட்டுமல்ல நம் போல் அந்த பாடலைப் படிக்கும் அடியவர்களுக்கும் ரசிப்பை தரும் சொல்லாக விளங்குகிறது.

 

(தொடரும் / வளரும்)

 

சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை