tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை   பாடல்

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

 

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் எனும்

 

வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட

 

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே.

 

ஆசைக் கடலில் அகப்பட்டு = சம்சார பந்தம் என்னும் ஆசை கடலில் அகப்பட்டு

 

அருளற்ற அந்தகன் = கருணையே இல்லாத எமனின்

 கைப்

பாசத்தில் = கையில் இருக்கக்கூடிய பாச கயிற்றில் 

 

அல்லற்பட இருந்தேனை = துன்பப்பட இருந்த என்னை

 

நின் பாதம் எனும்

வாசக் கமலம் = உனது பாதம் ஆகிய திருவடி தாமரைகளை

 

 தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட

நேசத்தை = என் தலையின் மீது நீயே வலிய வைத்து என்னை ஆண்டு கொண்ட நேசத்தை

 

என் சொல்லுவேன் = என்னவென்று சொல்லுவேன்

 ஈசர்பாகத்து நேரிழையே = ஈசனின் உடலில் ஒரு பாகமாக திகழும் நேரிழையே

 

ஆசாபாசங்களுடன் கூடிய இந்த பிரபஞ்சத்தில் ஆசை என்னும் கடலில் அகப்பட்டு இருக்கக்கூடிய என்னை, கொஞ்சம் கூட கருணையே இல்லாத யமன் என்னை தனது பாசக் கயிற்றால் சுருக்கிட்டு இருக்கும் அவல நிலையை அடையும் பொழுது, உனது வாசனை நிரம்பிய திருவடி தாமரைகளை நீயே எனது தலையின் மீது வைத்து என்னை ஆண்டு கொண்டு விட்டாய் இந்த கருணையை நான் என்னவென்று சொல்லுவேன் என்று வியக்கிறார்.

 

இங்கே 'எமன் எங்கே வந்தான்?' என்ற கேள்வி எழுகிறது. மன்னனின் ஆணைப்படி அமாவாசை தினத்தில் பட்டர் நிலவை காண்பிக்கவில்லை என்றால் பட்டருக்கு மரணம் சம்பவிக்கும். ஆகையால், இங்கே மரண பயம் ஏற்படுகிறது. எமன் ஒருவனது விதியை முடிக்க வந்துவிட்டால் எந்தவிதமான கருணையும் காட்ட மாட்டான். அதனால்தான் அருளற்ற அந்தகன் என்று அவனை குறிப்பிடுகிறார்.  

 

 எதனால் இங்கே ஆசை கடல் என்று குறிப்பிடுகிறார் என்று பார்த்தால் ஆசை என்பது ஒவ்வொன்றாக கிளர்ந்து கிளர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும். ஒருவனுக்கு நிலம் கிடைத்து விட்டது என்றால் அதில் வீடு கட்ட ஆசைப்படுகிறான். அதில் தன்னுடன் துணையாக இருக்க ஒரு இல்ல கிழத்தியை தேடுகிறான். பிறகு மக்கள் செல்வம், ஆடை அணிகலன்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஆசைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அடுத்து அடுத்த தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய சொத்து என ஆசை தொடர்கிறது அதனால்தான் ஆசைக்கடல் என குறிப்பிடுகிறார். "ஆசை கடலுக்கு ஓர் அளவில்லை" என்பார் தாயுமானவர்.

 

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அம்பிகையின் திருப்பாதங்கள் அவரது சிரசிலே வைத்து அவரை ஆட்கொண்ட நேசத்தை ஏன் சொல்லுவேன் என வியக்கிறார். இந்த உலகத்தில் தாய் தன் சேய் மேல் கொண்ட பாசத்தை, நேசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அல்லவா?

 

(தொடரும் / வளரும்)

 

 சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை