திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள்
வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே
திங்கட் பகவின் = இளம் சந்திரனின்
மணம் நாறும் சீறடி சென்னி வைக்க = மணம் வீசும் சீரடிகளை தலையில் வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா? = எங்களுக்கு எப்படி இந்த தவ பலனானது கிடைத்தது?
எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? = எண்ணிக்கை செய்ய முடியாத தேவர்களுக்கும் இந்த தவ பலன் கிடைக்குமா? தரங்கக் கடலுள் = அலை வீசும் கடலுள்
வெங்கட் பணி = வெண்மையான கண்களை உடைய பாம்பு (வெம்(மை)+கண் = வெங்கட், பணி = பாம்பு, தொழில்) அணை மேல் துயில் கூரும் விழுப்பொருளே = பஞ்சனை மேல் துயில கூடிய அன்னையே ('விழுப்பொருள்' = எப்போதும் இருக்கக் கூடிய பொருள். 'கேடில் 'விழுச்செல்வம்' கல்வி ஒருவருக்கு...' = ஒருவருக்கு கேடு இல்லாத நிலையான செல்வம் கல்வி).
சிவபெருமான் அம்பிகையின் திருவடிகளில் தனது சிரசை வைத்து வணங்கியதாக சொல்லப்படுவது உண்டு. அதனால் அவரது சிரசிலே இருக்கக்கூடிய இளம் இறைச்சந்திரனுடைய மணமானது அம்பிகையின் திருவடியில் வீசுகின்றது. அந்தத் திருவடிகளை எனது தலையின் மீது தாங்கக்கூடிய பெரும்பேறை நான் பெற்று இருக்கிறேன். இந்த தவப்பேறானது விண்ணிலே இருக்கக்கூடிய தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கிடைக்குமா? என்பது கூட தெரியவில்லை. அலை வீசும் கடலில் பாம்பு பஞ்சனையில் படுத்து உறங்கும் இறைவியே என வியக்கிறார்.
பாற்கடலில் இருக்கக்கூடிய பாம்பு அணையில் படுத்து உறங்குவது நாராயணனே. இந்த சொல் அம்பிகைக்கு எப்படி பொருந்தும்? என்று பார்த்தால், அன்னைக்கு நாராயணி, வைஷ்ணவி என்ற திருநாமங்கள் உண்டு. ஆகையால் நாராயணனின் சக்தியாக (கோவிந்த ரூபிணி - லலிதா சகஸ்ரநாமம்) அம்பிகை இருக்கும்பொழுது பாம்பனையில் உறங்கியதாக இங்கே பட்டர் குறிப்பிடுகிறார். அம்பிகையின் சக்தி உறங்கி விட்டால் உலகின் சக்தி நின்று விடாதா? அம்பிகை தூங்குவது போல் பாவனை செய்கிறாளாம். அதனால்தான் 'துயில் கூரும்' விழுப்பொருளே எனக் குறிப்பிடுகிறார்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை