கைக்கே அணிவது கன்னலும் பூவும்,கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை, விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டு திக்கே அணியும் திருவுடையானிட சேர்பவளே!
கைக்கே அணிவது கன்னலும் பூவும் = உனது திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர் கணைகளும்
கமலம் அன்ன
மெய்க்கே = தாமரைப் போன்ற மென்மையான மேனியில்
அணிவது வெண்முத்து மாலை = அணிந்து கொள்வது வெண்மையான முத்துக்களால் ஆன மாலையும்
விட அரவின்
பைக்கே = விஷம் உடைய பாம்பு படம் எடுத்தது போன்ற அணிகலன்களும் (விட = விஷ, அரவின் = பாம்பின்)
அணிவது பன்மணிக் கோவையும், பட்டும் = இடுப்பு பகுதியில் அணிவது பலவிதமான மணிகளை சேர்த்த அணிகலன்களும், பட்டாடையும்
எட்டு
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே! = எட்டு திசைகளையும் ஆடைகளாக அணிந்திருக்க கூடிய எம் பெருமானிடம் பொருந்தி இருக்கக்கூடியவளே
சிவபெருமான் தனது உடலில் அணிந்து இருப்பது எட்டு திசைகளை. அம்பாள் அணிந்திருப்பது கரும்பு, மலர் கணைகள், தாமரைப் போன்ற மேனியில் வெண்மையான முத்துமாலை, விஷத்தை உடைய படமெடுக்கும் பாம்பு போன்ற அணிகலன்கள், இடையில் பல அணிமணிகளை சேர்த்த மேகலாபரணமும், பட்டும். அம்பிகை அடைந்திருக்க கூடிய அணிகலன்களை எண்ணிப் பார்க்கும் பட்டர், அவளுக்கு துணையாக திகம்பரராக (திக்கு+அம்பரம்= திகம்பரர்) திகழும் எம்பெருமான் நிலையையும் பார்க்கிறார். அம்பாள் சர்வாபரணபூஷணியாக திகழ்வது இங்கே சிறப்பு என உணர்கிறார்.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன் பரங்கிப்பேட்டை