பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.
-----------------------
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் = பவளக் கொடியில் பூத்த பவளமல்லி பூவின் சிவந்த நிறம் போன்ற இதழ்களை உடையவளும்
பனிமுறுவல் = பணியை போன்ற புன்னகை
தவளத் திருநகையும் = வெண்மையான பற்கள் தெரியக்கூடிய புன்முறுவலும் (தவளம் = வெண்மை)
துணையா எங்கள் சங்கரனைத் = துணையாக இருக்கும் எங்கள் சிவபெருமானை
துவளப் பொருது = துவளும் படியாக வளைய அணைத்து
துடியிடை சாய்க்கும் துணை முலையாள் (துடி = உடுக்கை) உடுக்கை போன்ற இடையாள் சாய்க்கக்கூடிய திரு மார்பகங்களை உடையவள் எங்கள் அன்னை.
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே = அவளை வணங்குங்கள் உங்களுக்கு சொர்க்க லோகம் கிடைக்கும்.
முந்தைய பாடல்களில் போகத்தை அளிப்பவள் அன்னை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த போகங்களுக்கெல்லாம் சிறந்த போகமாக இருக்கக்கூடிய இந்திரலோகப் போகங்களை அடைய, சிவந்த இதழ்களை உடைய வாயும், குளிர்ச்சியை தரக்கூடிய புன்னகையும், வெண் பற்கள் தெரிய சிரிக்கக்கூடிய புன்னகையும் கொண்டு, தனது உடுக்கை போன்ற இடையையும், இரண்டு தனங்களையும் உடைய அம்பிகை எங்கள் இறை சிவனை அணைத்து இருக்கிறாள். அவளை வணங்கினால் இந்திர போகம் கிடைக்கும். அம்பிகையே வணங்குபவர்களுக்கு கிடைக்காதது எதுவும் இல்லை என்பதை கவித்துவமாக உணர்த்தும் பாடல் இது.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை