தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சை
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.
--------------------
தொண்டு செய்யாது = உனக்கு பூஜை புனஸ்காரங்கள் போன்ற தொண்டுகளை செய்யாமல்,
நின் பாதம் தொழாது = எனது திருவடிகளை தோழாது,
துணிந்து = எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக, இச்சை = தனது மனதுக்கு தோன்றும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டே,
பண்டு செய்தார் = உன்னை வழிபட்டவர்கள், உளரோ, இலரோ? = இருக்கிறார்களா இல்லையா அப்பரிசு அடியேன் = அதுபோல இந்த அடியேனும்,
கண்டு செய்தால் = வழிபட்டால், அது கைதவமோ = அது பொய்யாகுமோ?, அன்றிச் செய்தவமோ? = அல்லது செய்த தவமாகுமோ?,
மிண்டு செய்தாலும்= செய்யத் தகாதவற்றை செய்தாலும், பொறுக்கை நன்றே= பொறுத்துக் கொள்ள வேண்டும், பின் வெறுக்கை அன்றே= வெறுக்கக் கூடாது
-------------------
இதுதான் உண்மை பொருள் என்று தெரிந்தும், எனது திருவடியை தொழாமலும், தொண்டு செய்யாமலும் தம் மனம் விரும்பியவற்றை செய்த அடியார்கள் இருந்தார்களா இல்லையா? அவர்களைக் கண்டு அவ்வாறு நான் செய்தாலும் அது வஞ்சகமாகுமோ? அல்லது நான் செய்த தவமாகுமோ? அவ்வாறு நான் செய்ய தகாதது ஏதேனும் செய்தாலும், அதனை பொறுத்துக் கொள், என்னை வெறுத்து விடாதே அன்னையே!
தொண்டு செய்யாது பாதம் தொழாது இருந்து இறையை அடைந்தவர்கள் என்று பட்டர் யாரைச் சொல்கிறார் தெரியுமா?
ஆம், ஞானிகளான அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றவர்களை சொல்லுகிறார்.
எப்படி?
சிற்றின்பத்தில் திளைத்திருந்து பின் பேரின்பத்தை எய்திய அருணகிரிநாதர் "உனை தினம் தொழுதிலன், உனது இயல்பினை உரைத்திலன், பல மலர் கொண்டு உன் அடியினை உறப்பனிந்திலன்...." என்று பாடியதையும்,
"கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே" என்று பட்டினத்தாரும் பாடியதையும் இங்கே மேற்கோ
ள் காட்டுகிறார்.
(தொடரும் / வளரும்)
சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை