வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே
----------------------
வெறுக்கும் தகைமைகள்=வெறுக்கக் கூடிய செய்கைகள், செய்யினும் = செய்திருந்தாலும், தம் அடியாரை = தனது அடியார்களை, மிக்கோர் = பெரியவர்கள்,
பொறுக்கும் தகைமை = பொறுத்துக் கொள்ளும் செயல், புதியது அன்றே = புதியது அல்லவே, புது நஞ்சை உண்டு = ஆலகால விஷத்தை உண்டு,
கறுக்கும் திருமிடற்றான் = கருத்த திரு கருத்தை உடைய பெருமானின், இடப்பாகம் கலந்த பொன்னே = இடது பாகத்தில் கலந்துள்ள பொன்னிற பிராட்டியே,
மறுக்கும் தகைமைகள் செய்யினும் = செய்யத் தகாத செயல்கள் செய்து இருப்பதால் என்னை மறுத்தல் ஆகாது, யானுன்னை வாழ்த்துவனே = நான் உன்னை தொடர்ந்து வாழ்த்தி பணிவேன்
--------------------
ஆலகால விஷத்தை உண்ட காரணத்தால் கருத்த கழுத்தினை உடைய சிவபெருமானது இடது பாகத்தில் உள்ள பொன்னிறத்தை உடைய அன்னையை. வெறுக்கக்கூடிய செயல்களை செய்தாலும் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஏற்றுக்கொள்வது பெரியோர்களின் தன்மை. இது தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வு அல்லவா? ஆகையால், உன்னால் ஏற்றுக் கொள்ள படாத செயல்களை நான் செய்தாலும் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாய் என்ற தைரியத்தில் உன்னை வாழ்த்தி பாடிக் கொண்டிருக்கிறேன்.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை