tamilnadu epaper

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்

வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்

ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

------------------------

 

வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் = என்றும் நிலைத்திருக்கக் கூடிய வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டேன், மனத்தே ஒருவர் = மனத்தினால் ஒருவர், 

வீழும் படி அன்று=அதை சிந்திக்க இயலாது, விள்ளும் படி அன்று= வார்த்தையாலும் சொல்ல முடியாது, வேலை நிலம்

ஏழும் = ஏழு கடல்களுக்கும், ஏழு நிலங்களுக்கும் (வேலை= கடல்), பருவரை எட்டும் = உயர்ந்த மலைகள் எட்டுக்கும் (பரு = உயர்ந்த, வரை= மலை), எட்டாமல் = எட்டுவதற்கு அப்பால், இரவு பகல்

சூழும் சுடர்க்கு = இரவில் தோன்றும் சந்திர ஒளிக்கும் பகலில் தோன்றும் சூரிய ஒளிக்கும், நடுவே கிடந்து சுடர்கின்றதே = நடுவே கிடர்ந்து ஒளிர்கின்றதே.

--------------------

நிலையான வாழ்வு வாழும் படியான வாழ்க்கையை இறைவனின் திருவருளால் அறிந்து கொண்டேன். அந்த ஞான ஒளி ஆனது மற்றவர்கள் சிந்தனையில் தோன்றுவது போன்று அன்று. வார்த்தைகளால் விரிவுப்பதும் அன்று. அது ஏழு கடல்களுக்கும், ஏழு நிலங்களுக்கும், எட்டு மலைகளுக்கும் எட்டாத பொருள். அது இரவில் தோன்றும் சந்திர ஒளிக்கும், பகலில் தோன்றும் சூரிய ஒளிக்கும் நடுவே நின்று ஒளிரக் கூடியதாக இருக்கிறது.

 

ஐந்து வயது குழந்தை ஒரு பலூன் கிடைத்தால் அதுதான் உலகம் என்று நம்புகிறது, பத்து வயது சிறுவனுக்கு கிரிக்கெட் பந்தும், 20 வயது இளைஞனுக்கு காதலும், 30 வயது இளைஞனுக்கு வருமானமும், 40 வயதில் நிலபுலன்களும் உலகின் மிகப்பெரிய விஷயங்களாக தோன்றுகின்றது. விருப்பங்கள் மாறி மாறி வருகின்றன. 

ஆனால், பட்டருக்கு கிடைத்த இறை அனுபவமானது என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியது. அதனை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

 

அந்த இறை அனுபவம் "வாசித்து காணொணாதது, பூசித்து கூடொணொதது, வாய்விட்டு பேசொணாதது ...." என்பார் அருணகிரிநாதர்.

 

இடது கண் சந்திரனாகவும் வலது கண் சூரியனாகவும் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் நடுவே நெற்றியில் தோன்றும் ஞானக்கண் ஒளி பிரகாசமாக இருப்பதாக குறிப்பிடுகிறார். 

 

(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை