பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி யிறைவர் செம்பாகத்து இருந்தவளே.
--------------------
பரிபுரச் சீறடிப் = சிலம்பணிந்த திருவடிகளை உடையவள் { பரிபுரம் = சிலம்பு),
பாசாங்குசை= பாசம் அங்குசம் போன்ற ஆயுதங்களை தனது திருக்கரங்களில் வைத்திருப்பவள்,
பஞ்சபாணி = ஐந்து பானங்களை வைத்திருப்பவள், இன்சொல் = இனிய சொல்லை உடைய,
திரிபுர சுந்தரி = திரிபுரசுந்தரி ஆகிய தேவி, சிந்துரமேனியள் = சிந்தூரம் போன்ற திருமேனி உடையவள், தீமை நெஞ்சில் = தீய எண்ணங்களில் மனதில் கொண்ட,
புரிபுர வஞ்சரை = திரிபுர அரக்கர்களை, அஞ்சக் = அஞ்சும்படியாக,
குனி பொருப்புச் = வளத்த மேரு மலையாக (பொருப்பு = மலை), சிலைக்கை = வில்லை கரத்தில் கொண்டவரும் (சிலை = வில்)
எரிபுரை மேனி = எரியும் தழல் போன்ற மேனியை உடைய (புரை = போன்ற, ஒப்ப - குறை என்ற வார்த்தை இங்கே உரிச்சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது), இறைவர் செம்பாகத் திருந்தவளே = இறைவனாகிய சிவனது உடலின் பாகத்தில் இருப்பவளே.
--------------------
தனது திருவடிகளில் சிலம்பை அணிந்து, கரங்களிலே பாசம், அங்குசம், பஞ்சபாணம் என்று சொல்லக்கூடிய ஐந்து மலர் ஏந்தியவள், இனிய சொல்லை உடைய அழகி, செந்தூரம் போன்ற நிறத்தை உடைய அம்பிகை யார் என்று கேட்டால், தீய எண்ணங்களால் இருந்த அசுரர்களை அஞ்சும் படியாக மேரு மலையை வில்லாக வளைத்து அம்பு எய்தி தகர்த்தவரும், நெருப்பை ஒத்த திருமேனிய உடையவரும் ஆகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருப்பவளே ஆகும்.
ஆணவம், மாயை கண்மம் என்று சொல்லக்கூடிய திரிபுரங்களை அழித்தவர் சிவபெருமான். மெய், வாய், மூக்கு, நாக்கு, கண் முதலிய ஐந்து புலன்களால் ஏற்படும் சிற்றின்ப ஆசையை தனது அங்குசத்தால் கட்டுப்படுத்துபவள் அம்பிகை.
(தொடரும் /வளரும்) சிவகுமார் நடராஜன், பரங்கிப்பேட்டை