திருவான்மியூர் திரிபுரசுந்தரி அம்மன்*
நாயன்மார்களால் பாடப்பட்ட தலங்களுள் ஒன்று சென்னையில் உள்ள திருவான்மியூர். இறைவன் திருநாமம் மருந்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன். இந்த அம்மனுக்கு சொக்கநாயகி என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரியாக, மூன்று உலகங்களிலும் அழகும், அருளும் நிறைந்தவளாகக் காட்சி தருகிறாள்.
பத்தாம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டுக்கள் அம்மன் கோவில் சுவற்றில் உள்ளன.
கோவில் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலது புறம், திரிபுரசுந்தரி அம்மன் தனி சந்நிதியில் தெற்கு நோக்கி தாமரைப் பீடத்தின் மேலே, நான்கு திருக்கரங்களோடு பூரண சந்திர பிரகாசத்தோடு காட்சி தருகிறாள். அவரது இரு கரங்கள் அங்குச, பாசங்களை ஏந்தியுள்ளன. மற்ற இரு கரங்கள் அபய முத்திரைகளைப் பெற்றுள்ளன. ஒன்பது கஜ பச்சை பட்டு உடுத்தி ரோஜா, செவ்வந்தி, மல்லிகை மாலைகள் அணிந்து, அன்னை நிற்கும் கம்பீரத்தில் நம்மையே மறந்து போய் விடுவோம். விசேஷ நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புஷ்ப அலங்காரம் ஆகியவற்றுடன் அம்மன் தோன்றும் போது, அக்காட்சியைக் காணும் கண்களே பாக்கியம் செய்தவை. அன்னையை வழிபட்டு, கலைகளில் சிறந்த ஞானமும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் அடையலாம்.
கீதா ராஜா சென்னை